

'அத்ரங்கி ரே' படத்தின் வெற்றியால் மேலும் இரண்டு பாலிவுட் படங்களை நடிகர் தனுஷ் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013-ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் - தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான ‘ராஞ்சனா’ படம் பெரும் வெற்றி பெற்றது. இதே கூட்டணி மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 'அத்ரங்கி ரே' படத்துக்காக இணைந்தது. இதில் தனுஷுடன் அக்ஷய் குமார், சாரா அலி கான் இருவரும் நடித்துள்ளனர். ‘ராஞ்சனா’வைப் போன்றே இதுவும் ஒரு முக்கோண காதல் கதையாக ஒடிடியில் வெளியாகி ஹிட் அடித்துடன் தனுஷின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
'ராஞ்சனா', 'அத்ரங்கி ரே' படத்தின் வெற்றியால் இதே கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என பாலிவுட் செய்திகள் சொல்கின்றன. இந்தப் படத்தில் ஆனந்த் எல்.ராய் இயக்குநர் பொறுப்புடன் தயாரிப்பையும் மேற்கொள்ளவிருக்கிறார். ஆனந்த் எல்.ராய்யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கலர் எல்லோ புரொடக்ஷனின் கீழ் தனுஷ் படத்தை தயாரித்து இயக்கவுள்ளார் என்றும், இந்தப் படம் ஆக்ஷன் பிளஸ் காதல் படமாக இருக்கும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்ரங்கி ரே படத்தின் வெற்றியை உறுதிப்படுத்திய சில நாட்களிலேயே இந்தக் கூட்டணி மீண்டும் இணையும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஆனந்த் எல்.ராய் உடன் மூன்றாவது முறையாக இணையும் படத்துடன், தனுஷ் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்துடன் தனது நான்காவது பாலிவுட் படத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் தமிழில் 'மாறன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கிய இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதேபோல் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இதுதவிர, 'வாத்தி', 'நானே வருவேன்', 'திருச்சிற்றம்பலம்' மற்றும் தெலுங்கில் பிரபல இயக்குநர் சேகர் கம்முல்லாவின் பெயரிடாத படம் என்று பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.