

மலையாள படமான 'சார்லி'யின் தமிழ் ரீமேக்கில் நடிக்க மாதவன் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2015ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் 'சார்லி'. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கினார். ஃபைண்டிங் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.
மலையாளத்தில் இப்படத்துக்கு இளைஞர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்தி திரையுலகில் பிரபல நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் 'சார்லி' ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. துல்கர் சல்மான் வேடத்தில் நடிக்க தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். மலையாளத்தில் நாயகியாக நடித்த பார்வதியே தமிழிலும் நாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.
தமிழில் துல்கர் சல்மான் வேடத்தில் நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் மாதவன் துல்கரின் வேடத்தில் நடிக்க இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. தொடர்ச்சியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
'சார்லி'யில் மாதவன் நடிக்க மறுத்துவிட்டால் வேறு யாரை ஒப்பந்தம் செய்வது என யோசித்து வருகிறார்கள்.