

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் யாரிடமும் பாரபட்சம் பார்க்கவில்லை என்று ராதிகாவின் குற்றச்சாட்டுக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் பதில் அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் சரத்குமார் அணியில் இருந்து விஜயகுமார், ராம்கி, நிரோஷா மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்தக் கிரிக்கெட் போட்டிக்கு அழைக்கவில்லை என்று ராதிகா சரத்குமார் அதிருப்தி தெரிவித்தார். இது குறித்து ராதிகா சரத்குமார் குறிப்பிடும்போது, "இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைத்திருந்தால் உங்களின் முதிர்ச்சியான அணுகுமுறையும், அனைவரிடமும் இணக்கமாக இருக்கும் தன்மையும் வெளிப்பட்டு இருக்கும்.
இதைவிட பெரிய நிகழ்ச்சிகளை நடிகர் சங்கத்திற்காகவும், நாட்டிற்காகவும் நடத்தியவர்கள் அவர்கள். அவர்களை அழைக்காததால் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு இருக்கிறது. (பி.கு) நீங்கள் என்னையும் அழைக்கவில்லை. சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.
அழைப்பு விடுக்காதது குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கேட்டபோது, "அவர்களைச் சார்ந்த விஜயகுமார், ராம்கி, நிரோஷா ஆகியோர் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வரவே செய்தனர். அழைப்பிதழ் இவருக்கு அனுப்ப வேண்டும். அவருக்கு அனுப்பக்கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை.
எல்லோருக்கும் அனுப்பவே செய்தோம். அதேபோல சிறப்பு அழைப்பு என்ற எந்த விதிமுறையோடு யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை. நடிகர் விஜயகுமாருக்கு அழைப்பிதழ் தாமதமாகத்தான் சென்றுள்ளது. அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், நடிகர் சங்க நிர்வாகிகளின் பணிச்சூழல் புரிந்துகொண்டு போட்டி அன்று வந்திருந்தார்.
ஆகவே, நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் யாரையும் பாரபட்சமாக பார்க்கப்படவில்லை" என்று தெரிவித்தார் நாசர்.