

சுந்தரவேல் சிதம்பரம் என்ற சுந்தர்.சி ஆரம்பகாலத்தில் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்தார். 1995-ம் ஆண்டு ’முறை மாமன்’ திரைப்படம் மூலமாக சுந்தர்.சி இயக்குநராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை பாணி படங்கள் குவிவதற்கு வித்திட்ட சுந்தர்.சிக்கு இன்று (ஜன.21) பிறந்தநாள். தனது இலகுவான படைப்புகளால் ரசிகர்களை மகிழ்வித்த 10 படங்களின் பட்டியல் இது.
உள்ளத்தை அள்ளித்தா: 1996-ஆம் ஆண்டு வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம், இயக்குநர் சுந்தர்.சி-க்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. 90 கிட்ஸ் ரசித்த காதல் காமெடி திரைப்படம். நடிகை ரம்பாவுக்கும் அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இன்றும் "டெம்போ எல்லாம் வச்சு கடத்திருக்கோம்" என்ற இந்தப் படத்தின் காமெடி தலைமுறைகள் தாண்டி மீம்களாகப் பேசப்படுகிறது.
மேட்டுக்குடி: ’உள்ளத்தை அள்ளித்தா’ ஒன் டைம் ஒண்டர் அல்ல என்று நிரூபித்த படம்தான் 'மேட்டுக்குடி'. கார்த்திக் - நக்மா - ஜெமினி கணேசன் உள்ளிட்டோர் நடித்த இப்படம்தான் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது என்றே சொல்லலாம். ரீப்பீட் ஆடியன்ஸால் தியேட்டர் நிரம்பிய சுந்தர்.சி படங்களுள் இதுவும் ஒன்று.
அருணாச்சலம்: ரஜினியின் வெற்றிப் படங்களுள் ஒன்று 'அருணாச்சலம்'. '30 நாட்களில் 30 கோடி ரூபாய் செலவு செய்தால் ரூ.3,000 கோடிக்கு அதிபர் ஆகலாம்' என்ற நிபந்தனையுடன் பரபரப்பான காட்சிகள் கொண்ட படம். நடிகை வடிவுக்கரசி வில்லியாக மிரட்டி இருப்பார். பாடல்களும் ஹிட்டடித்தன.
அன்பே சிவம்: அகம்தான் அழகு என்று மனிதத்தை அழகாகப் பேசிய படம் 'அன்பே சிவம்'. கீழ்த்தட்டு மக்களைப் பற்றி சிறிதும் யோசிக்காத யதார்த்த பணக்காரராக வரும் மாதவனை தன் அன்பால் மாற்றி இருப்பார் கமல்ஹாசன். மனிதனுக்குள் இருக்கும் கடவுளை வெளிக்கொண்டு வந்த படைப்பு. சுந்தர்.சி சாயல் இல்லாத படம் என்றாலும் மேங்கித் தரத்தில் தன்னை நிரூபித்திருப்பார் சுந்தர்.சி.
வின்னர்: வடிவேல் காமெடியில் கலக்கிய `வின்னர்` படம். சொல்லவே வேண்டாம், கைப்பிள்ளையாக வடிவேல் கலக்கியிருப்பார். "இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு", "அது போன மாசம்... இது இந்த மாசம்", "ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா உன்கிட்ட பினிஷிங் சரி இல்லையப்பா" என படம் முழுக்க வரும் வடிவேல் காமெடியை இன்று வரை நமக்கு வாழ்வியல் கன்டென்ட்டாக நீடிக்கிறது என்றால், அதற்கும் முக்கியக் காரணம் இயக்குநர் சுந்தர்.சிதான்.
உள்ளம் கொள்ளை போகுதே: கார்த்திக், பிரபுதேவா நடித்த அழகான காதல் கதை `உள்ளம் கொள்ளை போகுதே`. ஒருதலைக் காதலின் வலியை அழகாகக் சொல்லியிருப்பார். படம் முழுக்க பிரபுதேவா தன் காதலையும் அதன் வலியையும் சுமந்துகொண்டே நடித்திருப்பார். நகைச்சுவையுடன் மெல்லிய காதல் உணர்வுகளையும் திரையில் கொண்டுவர முடியும் என்பதை சுந்தர்.சி நிரூபித்திருப்பார்.
கிரி: இந்தத் திரைப்படம் முழுவதும் ஆக்ஷன்தான். நடிகர் அர்ஜூனுக்கு ஏற்ற கதைக்களம். ஒருபக்கம் சண்டைக் காட்சிகள் அனல் பறக்க, இன்னொரு பக்கம் காமெடியில் வடிவேலு தெறிக்கவிட்டுக் கொண்டிருப்பார். நகைச்சுவை சேனலில் அதிகமுறை ஒளிபரப்பப்பட்ட ஆக்ஷன் சினிமா என்றால் அது 'கிரி'தான்.
அரண்மனை: சுந்தர்.சி இயக்கிய `அரண்மனை`யின் மூன்று பாகங்களுமே ரசிகர்களை எங்கேஜிங்காக வைத்துக் கொண்ட நகைச்சுவை - திகில் படங்கள்தான். வர்த்தக ரீதியில் வெற்றிகளைக் குவித்ததும் கவனத்துக்குரியது. தன்னை தொடர்ந்து நடிகராகவும் நிலைநிறுத்திக் கொள்ள இப்படங்கள் துணைபுரிந்தன.
கலகலப்பு: `கலகலப்பு` கவலை மறந்து சிரிப்பதற்காக மட்டுமே எடுத்த படம் என்றுகூட சொல்லலாம். நடிகர் சிவாவின் அண்டர் ப்ளே காமெடியில் காட்சிக்குக் காட்சி நகைச்சுவைத் தெறிக்கும் திரைப்படம். முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் எடுபடாமல் போனாலும், அதுவும் ரசிகர்களை நகைச்சுவையால் மகிழவைத்த படம்தான்.
ஆம்பள: விஷால் - சந்தானம் கூட்டணியில் கலகலப்பூட்டிய படம். ட்ரேட் மார்க் சுந்தர்.சியின் நகைச்சுவைக் காட்சிகள் நிரம்பிய இந்தப் படமும் ரசிகர்களை பெரிதாக ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம்.