

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சேகர் (சதீஷ்), ஐ.டி. நிறுவன ஊழியர். இவர், சக ஊழியரான பூஜாவை (பவித்ரா லட்சுமி) காதலிக்கிறார். சேகரின் பக்கத்து வீட்டில் விலங்குகளை வைத்து மரபணு மாற்று ஆராய்ச்சி செய்துவருகிறார் ஒரு விஞ்ஞானி (ஜார்ஜ் மரியான்). அவரது ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தப்பிவிடுகிறது ‘படையப்பா’ என்ற நாய். எதிர்பாராதவிதமாக அது சேகரை கடித்துவிட, இப்போது கடிபட்ட சேகருக்கு நாயின் குணாதிசயங்களும், கடித்த நாய்க்கு மனிதனின் குணாதிசயங்களும் வெளிப்படத் தொடங்குகின்றன. இதன்பிறகு சேகரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது கதை.
ஃபேன்டஸி தன்மைகொண்ட ஒருவரி கதையாக ஈர்த்தாலும், திரைக்கதையாக, காட்சிகளாக ஈர்க்கத் தவறிவிடுகிறது படம். பெண் பார்க்கப்போன இடத்தில் பிஸ்கட் மீது கொண்ட ஈர்ப்பால், காதலியின் அப்பாவை கதாநாயகன் கடித்து வைத்துவிடும் காட்சியில் இருந்தாவது படம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்த்தால், எல்லாம் கமர்ஷியல் தமிழ் சினிமாவுக்கே உரிய சராசரி நகைச்சுவை காட்சிகளாக நிறைந்திருப்பது சிறுவர்களை வேண்டுமானால் குஷிப்படுத்தலாம். மற்ற பார்வையாளர்களை உட்கார வைப்பது, முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ள நடிகர்களும், படையப்பா நாய்க்கு குரல்கொடுக்கும் மிர்ச்சி சிவாவும்தான்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ள சதீஷ், இதில் கதாநாயகனுக்குரிய நடிப்பை தருவதில் வெற்றி பெறுகிறார்.
சின்னத்திரையில் இருந்து வந்துள்ள பவித்ரா லட்சுமி நன்றாகவே நடிக்கிறார். விஞ்ஞானியாக வரும் ஜார்ஜ் மரியான், வில்லனாக வரும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இருவரும் மனதில் நிற்கின்றனர். இவர்கள் தவிர, தெரிந்த நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர் இருந்தும் யாரும் மனதில் தங்கவில்லை.
சிறுவர்கள் விரும்பி பார்க்கக்கூடிய படத்தில், ஐ.டி. நிறுவன பணிச் சூழலைபகடி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் காலாவதியான இரண்டாம்தர நகைச்சுவை துணுக்குகள் பயன்படுத்தியதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
‘‘சிலந்தி கடித்து ஹீரோ ஸ்பைடர்மேனாக மாறினா நம்புற நீங்க, இதையும் நம்புங்க’’ என்ற வசனம் இடம்பெறுவது நியாயம்தான். ஆனால், ஸ்பைடர்மேன் வரிசைப் படங்களின் திரைக்கதை உருவாக்கமும், காட்சிகளும் பார்வையாளர்களை கட்டிப்போடுவது வெறும் பிரம்மாண்டத்துக்காக மட்டுமல்ல, நம்பகத்தன்மைக்காக. இதைஇயக்குநர் உணர்ந்திருந்தால் பார்வையாளர்களை இப்படி சமாதானம் செய்ய முயற்சித்திருக்க மாட்டார். அதேபோல, 2006-ல் வந்த ‘த ஷேகி டாக்’ (The Shaggy Dog) படத்தின் ஒருவரிக் கதையையும், சில காட்சிகளையும் அப்பட்டமாக உருவியிருக்கவும் மாட்டார்.
மனித - நாய் குணங்கள் இடம் மாறுவதால் ஏற்படும் தருணங்களை தொடக்கப்பாடலில் காட்டியதுபோல, படம் முழுவதும் தூவியிருந்தால், வயது கூடியவர்களுக்கான பொழுதுபோக்கு சினிமாவாகவும் இப்படம் மாறியிருக்கும்!