

‘மாநாடு’ படக்குழுவை ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பாராட்டியுள்ளார்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் கடந்த நவ.25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் படக்குழுவை பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், ‘மாநாடு’ படத்தை பார்த்த ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:
‘மாநாடு’ பார்த்தேன். ‘மன்மதனில்’ இருந்ததைப் போல சிம்பு கலக்கியிருக்கிறார். சில இடங்களில் அதை விட அதிகமாக. எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கிய படத்தைப் போல ஃபுல் பார்மில் இருக்கிறார். திரைக்கதை, ஒளிப்பதிவி, இசை, எடிட்டிங், ஸ்டன்ட், இயக்கம் என அனைத்துமே சிறப்பு. ஒட்டுமொத்தமான வெங்கட் பிரபு மற்றும் யுவன் இருவருக்கும் நான் சொல்லிக் கொள்வது, ‘நிமிர்ந்து நில் துணிந்து செல்’. (நான் வாழ்க்கையில் நம்பிக்கையிழக்கும்போது இந்தப் பாடல் பலமுறை என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறது. இந்த பாடலை உருவாக்கிய உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை).
இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் அப்பதிவில் கூறியுள்ளார்.