

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன் என்று 'மாப்ள சிங்கம்' பத்திரிகையாளர் சந்திப்பில் அஞ்சலி தெரிவித்தார்.
புதுமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் விமல், அஞ்சலி, சூரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மாப்ள சிங்கம்'. ரகுநந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் மார்ச் 11ம் தேதி வெளியாக இருக்கிறது.
'மாப்ள சிங்கம்' படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் அஞ்சலி. அப்போது அவர் பேசியதாவது, "விமல் என்னுடைய நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப நாட்களாக தெரியும். என்னை புரிந்து கொண்ட நாயகன் விமல். அதனால் தான், அவருடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறேன். படப்பிடிப்பின்போது உடன் நடிப்பவர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பார்.
என்னை நயன்தாராவுக்கு போட்டியாக தயாரிப்பாளர்கள் உருவாக்குகிறார்கள் என்று பேசுகிறார்கள். அதில் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை, சந்தோஷம்தான். போட்டி இருந்தால்தான், ஆரோக்கியமாக இருக்கும்.
நான் தமிழில் நிறைய படங்கள் ஒப்பந்தமாவது உண்மை தான். அவற்றில் நல்ல கதையம்சமும், கதாபாத்திரங்களும் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். நான் நடித்த சில படங்களில் நான் ரொம்ப குண்டாக தெரிவதாக நண்பர்கள் சொன்னார்கள். எனவே உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருகிறேன். இதுவரை 6 கிலோ எடையை குறைத்து இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் மெலியவேண்டும் என்று நினைத்துள்ளேன்.
‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்கு படத்தில் நான் பேய் வேடத்தில் நடித்தேன். அது ஒரு புது அனுபவமாக இருந்தது. நிஜ வாழ்க்கையில், நான் பேய்க்கு பயப்பட மாட்டேன். தமிழில் இப்போது ‘இறைவி’, ‘பேரன்பு’, ‘தரமணி’, ‘காண்பது பொய்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். இதில் ‘காண்பது பொய்’ திகில் படம். ஆனால் பேய் படம் அல்ல. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்" என்று தெரிவித்தார்.