

இசையமைப்பாளர் இளையராஜா, ‘விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்’ என்ற பாடல் வரிகளை தானே பாடி ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள் ளார்.
புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே அனைத்து தொலைக்காட்சிகள், வானொலிகள், பொதுநிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெறும் பாடல், ‘சகலகலா வல்லவன்’ படத்தில் வரும் ‘இளமை இதோ இதோ’ பாடல்தான். பைக்கில் ஸ்டைலாக வரும் கமல்ஹாசன், ‘விஷ் யூ எ ஹேப்பிநியூ இயர்’ என்று உற்சாகமாகவாழ்த்து தெரிவிப்பார். இளையராஜா இசையமைப்பில், மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய இப்பாடல், இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், புத்தாண்டைமுன்னிட்டு இந்தப் பாடலை பாடியுள்ள இளையராஜா, தனது ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். காரில் பயணித்தபடி மிகுந்த உற்சாகத்துடன் இப்பாடலை பாடும் இளையராஜா, நிறைவாக ‘இது எப்படி இருக்கு’ என்று கேட்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.