

இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'குயின்' தமிழ் ரீமேக்கில், தேதிகள் பிரச்சினையால் விலகியிருக்கிறார் நயன்தாரா.
மார்ச் 2014ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமைகளை வாங்கியிருக்கிறார் தியாகராஜன். இப்படத்தில் கங்கனா ரனாவத் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்தது. 'குயின்' தமிழ் ரீமேக்கிற்கு தான் வசனம் எழுதவிருப்பதாகவும், ரேவதி இயக்க இருப்பதாகவும் சுஹாசினி மணிரத்னம் கூறினார்.
இந்நிலையில், இப்படத்தில் கங்கனா ரனாவத் வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், 'இருமுகன்', 'காஷ்மோரா' மற்றும் சற்குணம் தயாரிக்கும் படம் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருவதால் அவரிடம் தேதிகள் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும், வெளிநாட்டில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால் படக்குழு நயன்தாராவிடம் மொத்தமாக தேதிகள் கேட்டிருக்கிறது. மொத்தமாக தேதிகள் ஒரே சமயத்தில் கேட்டதும் நயன்தாரா விலகலுக்கு காரணமாக கூறப்படுகிறது.