

"என் படத்தில் பணிபுரிபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நிறைய இடத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. இது இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. இது அப்பட்டமான உண்மை” என்றார் இயக்குநரும் தயாரிப்பாளருமான பா.இரஞ்சித்
சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ரைட்டர்’ படத்தை பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை ப்ராங்க்ளின் ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளராக ப்ரதீப் காளிராஜா, எடிட்டராக மணிகண்டன் சிவகுமார் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (டிச 21) சென்னையில் நடைபெற்றது. இதில் பா.இரஞ்சித் , சமுத்திரக்கனி, உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். இதில் பா.இரஞ்சித் பேசும்போது, "என்னுடைய அரசியலை புரிந்து கொண்டால் மட்டும் என் ஆபீஸுக்குள் வரமுடியும். இல்லையென்றால் யாருமே வரமாட்டார்கள். என்னிடம் ஒருவர் வந்து பேச நினைக்கிறார் என்றால், நான் பேசுவது ஏதோவொரு வகையில் சரி என்று ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே என்னிடம் வந்து பேசமுடியும்.
கதைத் தேர்வில் நான் பிடிவாதமாகத்தான் இருப்பேன். எனக்கு பிடிக்காத கதையோ அல்லது எனக்கு எதிரான கதையோ என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வெளியாகக் கூடாது என்று நான் நினைக்கிறேன். சினிமா இயக்குவதற்கு மட்டும்தான் நான் வந்தேன். எனக்கென்று ஒரு கலாசாரம் இருக்கிறது. அது ஏன் இங்கே பேசப்படவே இல்லை. அதையெல்லாம் நான் இங்கே பேசப் போகிறேன் என்ற நோக்கத்துடன்தான் நான் சினிமாவுக்கே வந்தேன். அந்த நோக்கத்தை ஒட்டித்தான் என்னுடைய பணிகள் அனைத்துமே இருக்கவேண்டும் என்று நான் வடிவமைத்துக் கொண்டேன். இங்கு நான் ஒரு கட்டுப்பாடுடன்தான் இருக்கிறேன். இங்கு நான் பல கட்டுப்பாடுகளை உடைத்து யோசிப்பது கிடையாது. பல இலக்கியங்கள், நாவல்கள், திரைப்படங்கள் எல்லாம் பார்க்கும்போது இதையெல்லாம் நாம் ஏன் பேசமுடியவில்லை என்று தோன்றும். அப்படி பேசவேண்டுமென்றால் அதற்கு நான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். எனக்கு முன்னால் சென்றவர்கள் அதற்கான பாதையை எனக்கு அமைத்துக் கொடுத்திருந்தால் நான் அதில் எளிதாக பயணித்திருப்பேன்.
எனது முதல் படத்தின்போது எனக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், திரைக்கதையில் செய்யப்பட்ட மாற்றங்கள் எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை கொடுத்தன. அதுபோன்ற ஒரு உளைச்சலை என்னுடைய தயாரிப்பில் இயக்கும் இயக்குநர்களுக்கு நான் கொடுக்க கூடாது என்று நினைக்கிறேன்.
ஹரி ஒரு அற்புதமான நடிகர். ‘மெட்ராஸ்’ படத்தில் ஜானி கதாபாத்திரத்துக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய வரவேற்பு அவருக்கு கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால், என் படத்தில் பணிபுரிபவர்களுக்கு சிக்கலும் உருவானது. ரஞ்சித் படத்தில் பணிபுரிபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நிறைய இடத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. இது இல்லை என்று யாரும் சொல்லமுடியாது. இது அப்பட்டமான உண்மை. அதில் ரொம்ப பாதிக்கப்பட்டவர் என்று பார்த்தால் ஹரிதான். வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்த நடிகர் அவர். அவருடயை படத்திலும் கூட நடித்திருக்கிறார். ‘ரைட்டர்’ படத்தில் அவர் நடிப்பதே ப்ராங்க்ளின் சொல்லித்தான் எனக்கு தெரியும்" என்றார் பா.இரஞ்சித் பேசினார்.