முதல் பார்வை: தோழா - அன்பின் கொண்டாட்டம்!

முதல் பார்வை: தோழா - அன்பின் கொண்டாட்டம்!
Updated on
2 min read

வம்சி இயக்கும் முதல் தமிழ்ப் படம், நாகார்ஜூனா- கார்த்தி நடிப்பில் உருவான முதல் படம், கார்த்தி - தமன்னா இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் என்ற இந்தக் காரணங்களே 'தோழா' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

'தோழா' ட்ரெய்லர் தந்த நம்பிக்கையுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.

கதை: பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்; எப்படியும் வாழலாம் என்று நினைக்கிறார் கார்த்தி. பணம் இருந்தும் சந்தோஷம் இல்லாமல் தவிக்கிறார் நாகார்ஜூனா. இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அதற்குப் பிறகு என்ன ஆனது? யார் வாழ்க்கை எப்படி மாறியது? என்பதை அன்பு குறையாமல் சொல்லும் படம் 'தோழா'.

அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தம், துப்பாக்கி, வன்முறை, துரோகிகள், எதிரிகள் என்று எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க பாசிட்டிவ் கதையை கொடுத்த விதத்தில் இயக்குநர் வம்சிக்கு தமிழ் சினிமா உற்சாக வந்தனம் சொல்கிறது.

நாகார்ஜூனா வீல்சேரில் அமர்ந்தபடி, ஆளுமையை செலுத்தும் விதத்தில் இயல்பாக ஈர்க்கிறார். மன அழுத்தம், மகிழ்ச்சி, நினைவுகள், காதல் என்று ஒவ்வொரு உணர்விலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். கூடவே லவ்வர் பாய் இமேஜ் உடையாத அளவுக்கு ஜஸ்ட் லைக் தட் டீல் பண்ணுகிறார். அதுவும் பிறந்தநாள் பார்ட்டியில் பிரகாஷ்ராஜ், தமன்னாவிடம் வாட் ய சர்ப்ரைஸ் என்று காட்டும் ரியாக்‌ஷன் அசத்தல்.

கார்த்தியின் துறுதுறு உடல்மொழி, பரபர டயலாக் டெலிவரி, அலட்டிக்கொள்ளாத முகபாவனைகள் என்று ஒவ்வொரு பிரேமிலும் மனிதர் பின்னி எடுக்கிறார். வெல்டன் கார்த்தி!

''அவ்ளோ பெரிய பாத்ரூம் கொடுத்ததுக்காக சாக்ஸ் போடறதா?'', ''மணிக்கூண்டெல்லாம் விற்க மாட்டாங்க சார்.'','' சப்டைட்டில் ப்ளீஸ்'', ''பெயின்டிங் வரைய ஆரம்பிச்சுடுறேன்'' என்று கார்த்தி பேசும் வசனங்களில் வெடித்துச் சிரிக்கிறது தியேட்டர்.

கதாபாத்திரத்துக்குரிய பங்களிப்பில் இயல்பு மீறாமல் நடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். அந்த பெயின்டிங் பற்றி விளக்கம் கொடுக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.

தமன்னா அழகாக வந்து போகிறார். ஜெயசுதா, விவேக், கல்பனா ஆகியோர் பொருத்தமான தேர்வு. அனுஷ்கா, ஸ்ரேயாவும் சிறப்புத் தோற்றத்தில் முகம் காட்டிச் செல்கிறார்கள்.

''மனுஷன் போற இடத்துக்கெல்லாம் மனசு போகுமா?'', ''பிரேயர்ல சைலன்ஸ் இருக்கலாம். பார்ட்டியில கூடவா?''

''தொலைச்ச இடத்துலதான் தேடணும்'' , ''உன்னை ஏன் எனக்கு பிடிச்சிருக்குண்ணு இப்போ கூட தெரியலை. ஆனா, உனக்கு பிடிச்சவங்களை எந்த அளவுக்கு சந்தோஷமா வெச்சுப்பன்னு தெரியும்.'' போன்ற ராஜூமுருகன், முருகேஷ்பாபுவின் வசனங்கள் படத்துக்கு பலம்.

வினோத்தின் கேமரா பாரீஸ் அழகையும், பாசிட்டிவ் எனர்ஜியையும் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. கோபி சுந்தர் இசை பரவாயில்லை ரகம் தான். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பாடல்கள் பெரிதாக ரசிக்கும் படி இல்லாதது குறை.

பிரவீன் கே.எல் இரண்டாம் பாதியில் சின்னதாய் கத்தரி போட்டிருக்கலாம்.

ஹீரோ, வில்லன், மோதல், சுபம் என்று வழக்கமான சினிமா ஃபார்முலாவைக் கையாளாமல் நகைச்சுவையையும், அன்பையும் பிரதானமாக வைத்து கதை நகர்த்திய விதம் புத்திசாலித்தனமானது. காதலுக்கு போதிய இடம் கொடுத்த விதத்திலும் கவனிக்க வைக்கிறார்.

அம்மாவின் அன்புக்காக ஏங்கும் கார்த்தி எப்படி ஜெயிலுக்குப் போகும் அளவுக்கு தவறு செய்கிறார்?, போலீஸ்கிட்ட மாட்டலைன்னா நம்ம லெவல் வேற என்று சொல்லும் கார்த்தி அப்படியே யு டர்ன் அடித்து மாறுவது எப்படி? என்றெல்லாம் சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

ஆனாலும், குடும்பத்துடன் கண்டு மகிழவும், அன்பின் கொண்டாட்டத்தை அனுபவிக்கவும் 'தோழா' சரியான தேர்வு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in