சாலையோரம் இறந்து கிடந்த விஜயகாந்த் பட இயக்குநர்

எம்.தியாகராஜன்,
எம்.தியாகராஜன்,
Updated on
1 min read

விஜயகாந்த்தை வைத்து ‘மாநகர காவல்’ படத்தை இயக்கிய எம்.தியாகராஜன், சென்னை வடபழனியில் சாலையோரம் இறந்து கிடந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவின் எதிரே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று காலை விருகம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் அந்த சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் பிரபல இயக்குநரான எம்.தியாகராஜன் என்பது தெரியவந்தது.

அருப்புக்கோட்டையை சேர்ந்த எம்.தியாகராஜன், டிஎப்டி படித்தவர். இவர் பிரபு நடித்த ‘வெற்றி மேல் வெற்றி’, விஜயகாந்த் நடித்த ஏவிஎம் நிறுவனத்தின் 150-வது படமான ‘மாநகர காவல்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பாக அவரது மனைவி இறந்ததால், தியாகராஜன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று (8-ம் தேதி) அதிகாலையில் உடல்நலக்குறைவால் தியாகராஜன் உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

தியாகராஜனுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தியாகராஜனின் உடல் அவரது சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரது சகோதரர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநர் ஒருவர் கவனிப்பாரின்றி சாலையோரம் இறந்து கிடந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in