மம்மூட்டியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? - ரம்யா பாண்டியன் பேட்டி

மம்மூட்டியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? - ரம்யா பாண்டியன் பேட்டி
Updated on
1 min read

மம்மூட்டியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து ரம்யா பாண்டியன் பேசியுள்ளார்.

கேரளத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி. 'ஆமென்', 'அங்காமலி டைரீஸ்', 'ஈ.மா.யூ', 'ஜல்லிக்கட்டு' என இவர் இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

கடைசியாக இவர் இயக்கிய ‘சுருளி’ திரைப்படம் கடந்த நவ.19 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை லிஜோ ஜோஸ் இயக்கியுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ் - மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்துக்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மம்மூட்டி தயாரிக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இப்படத்தில் மம்மூட்டியுடன் ரம்யா பாண்டியன் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இதனை ரம்யா பாண்டியன் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு ரம்யா பாண்டியன் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

இயக்குநரின் குழு மற்றும் மம்மூட்டி ஆகியோர் ‘ஜோக்கர்’ படம் பார்த்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய நடிப்பு பிடித்துள்ளது. தன்னுடைய ஒரு படத்தில் என்னை நடிக்க வைக்க தான் விரும்பியதாகவும் மம்மூட்டி என்னிடம் கூறினார். ஆனால் அப்படம் சாத்தியமாகவில்லை. அதன் பிறகு அவரது குழு பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துள்ளனர். அதன் பிறகு இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

முதலில் நான் இந்த படக்குழுவுக்கு புதிது என்பதால் மிகவும் அமைதியாக இருந்தேன். அதன்பிறகு மம்மூட்டியே என்னிடம் உரையாடலை தொடங்கினார். அவர் மிகவும் எளிமையான, இனிமையான, பணிவான மனிதர். மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். படப்பிடிப்பின் போது பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

இவ்வாறு ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in