

'ப்ரேமம்' படத்துக்கு ஏன் கேரள அரசு விருது வழங்கவில்லை என்பது குறித்த நடுவர் குழு தலைவர் கருத்தால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் 'சார்லி' படத்தில் நடித்தற்காக துல்கர் சல்மான் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் நாயகி பார்வதி சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். 'சார்லி' பட இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதுப் பட்டியலில், சென்ற வருடம் கேரள திரை உலகில் பல சாதனைகளை முறியடித்த 'ப்ரேமம்' திரைப்படத்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. 'ப்ரேமம்' படத்துக்கு விருது அறிவிக்கப்படாதது குறித்து இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் 'ப்ரேமம்' படத்துக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை என்று கேரள மாநில விருதுகள் பிரிவின் நடுவர் குழு தலைவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பது:
"'ப்ரேமம்' சிறந்த பொழுதுபோக்குப் படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாநில விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கும்போது சில அளவுகோல்கள் உள்ளன. அந்த அளவு கோல்களுக்கு ஏற்ப 'ப்ரேமம்' இல்லை ஏனென்றால் அந்தப் படத்தின் உருவாக்கமும் அவ்வளவு கச்சிதமாக இல்லை.
இதற்கு அர்த்தம் அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு படம் எடுக்கத் தெரியாது என்பது அல்ல. அவரது முந்தைய படமான 'நேரம்’ கச்சிதமான படம். ஆனால் 'ப்ரேமம்' படத்தை பார்க்கும்போது அதன் திரைப்படமாக்கலில் அல்போன்ஸின் அலட்சியமான அணுகுமுறையே தெரிகிறது. அதனால் தான் தேர்வின்போது ஒரு பிரிவில் கூட 'ப்ரேமம்' தேர்ந்தெடுக்கப்படவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
நடுவர் குழு தலைவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இக்கருத்து குறித்து பலரும் தங்களது அதிருப்தியை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.