மம்முட்டி, மோகன்லால் தொழிலாளிகளுடன் அமர்ந்து டீ குடிப்பார்கள்; இங்கே அது நடக்குமா? - தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசம்

மம்முட்டி, மோகன்லால் தொழிலாளிகளுடன் அமர்ந்து டீ குடிப்பார்கள்; இங்கே அது நடக்குமா? - தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசம்
Updated on
1 min read

கேரளாவில் மம்முட்டி,மோகன்லால் என கதாநாயகர்கள் அத்தனை பேரும் சாதாரண தொழிலாளிகளுடன் அமர்ந்து டீ குடிப்பார்கள் . இங்கே அது நடக்குமா? என தயாரிப்பாளர் கே.ராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சோனியா அகர்வால், விமலா ராமன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிராண்மா’. ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ள இப்படத்தை ஜி.என்.ஏ பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர்.

இதில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:

நான் எது பேசினாலும் ட்ரெண்ட் ஆகிவிடுகிறது. நான் வழக்கமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அனைவருக்கும் தெரியும் .நல்லது இருந்தால் வாழ்த்துவேன். ஏதாவது குறை இருந்தால் அதையும் சொல்லி விட்டுச் செல்வேன். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழ்ப் படம் எடுப்பதில் ஆச்சரியம் இல்லை. அப்படி எடுத்து இந்த 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் நடுத்தெருவுக்கு வந்துள்ளார்கள். இந்த பத்தாண்டுகளில் ஒரு 5000 பேர் நடுத்தெருவுக்கு வந்து இருப்பார்கள். ஆண்டுக்கு 200 படம் தயாரானால் 5 தயாரிப்பாளர்கள் தப்பிப்பதே பெரிய விஷயம்.

அதனால்தான் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுங்கள் என்று நான் கத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு தயாரிப்பாளர் நன்றாக இருந்தால் மறுபடியும் படம் தான் எடுப்பான். படமெடுத்து லாபம் வர வேண்டாம், முதலீடு வந்தால் போதும் அடுத்த படத்தை ஆரம்பித்து விடுவார்கள். அதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.இதனால் தொழில் நுட்பக் கலைஞர்கள் நடிகர்கள் நடிகைகள் வாழ்கிறார்கள். துணை நடிகர்கள் வாழ்கிறார்கள்.

இங்கே ஹேமந்த் மேனன் என்கிற நடிகர் வந்திருக்கிறார் .அவர் கேரளாவில் கதாநாயகனாக நடித்தவர் .இந்தப் படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். நம் ஊரில் இப்படி நடக்குமா? கதாநாயகன் ஆகிவிட்டால் வில்லனாக நடிக்க மாட்டார்கள். விஜய்சேதுபதி மட்டும் விதிவிலக்கு.

கேரளாவில் இருப்பவர்கள் தொழிலைத் தெய்வமாக மதிப்பவர்கள். கேரளாவில் மம்முட்டி,மோகன்லால் என கதாநாயகர்கள் அத்தனை பேரும் சாதாரண தொழிலாளிகளுடன் அமர்ந்து டீ குடிப்பார்கள். இங்கே அது நடக்குமா? கொஞ்சம் விட்டவுடன் கேரவனில் போய் உட்கார்ந்து கொள்வார்கள்.

இவ்வாறு கே.ராஜன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in