

சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாயவன்' படத்தின் வில்லனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜாக்கி ஷெராஃப்
'பீட்சா', 'தெகிடி', 'சூது கவ்வும்' உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'மாயவன்'. பிப்ரவரி 15ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னையில் நடைபெற்றது.
நாயகனாக சந்திப் கிஷன் மற்றும் நாயகியாக லாவண்யா திரிபாதி நடித்து வருகிறார்கள். டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஜெ பி, மைம் கோபி, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
ஜிப்ரான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார் நலன் குமாரசாமி. கோபி அமர்நாத் ஒளிப்பதிவையும், லியோ ஜான் பால் எடிட்டிங் பொறுப்பையும் கவனித்து வருகிறார்கள்.
இப்படத்தின் வில்லன் பாத்திரத்திற்காக ஜாக்கி ஷெராஃபை தொடர்பு கொண்டார்கள். கதையைக் கேட்ட ஜாக்கி ஷெராஃப் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சென்னையில் ஏப்ரல் 4ம் தேதி தொடங்கவிருக்கும் படத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
'ஆரண்ய காண்டம்' மற்றும் 'கோச்சடையான்' படங்களைத் தொடர்ந்து ஜாக்கி ஷெராஃப் ஒப்பந்தமாகி இருக்கும் தமிழ் படம் 'மாயவன்' என்பது குறிப்பிடத்தக்கது.