

தான் பேச விரும்பாத இரண்டு படங்கள் தான் இயக்குநர் விக்ரம் கே குமார் சினிமா துறையில் காலூன்ற உதவிகரமாக இருந்தது. இயக்குநர் பிரியதர்ஷனின் உதவி இயக்குநரான விக்ரம், தெலுங்கில் 'இஷ்டம்', தமிழில் 'அலை' ஆகிய இரண்டு படங்களின் தோல்விக்குப் பிறகு கவனிக்கப்படாத நிலையில் இருந்தார்.
"என்னிடமிருந்து நீ எதையுமே கற்றுக்கொள்ளவில்லையா என அந்த இரண்டு படங்கள் பார்த்ததும் பிரியன் சார் என்னைக் கேட்டார்" என நகைச்சுவையாக சொல்கிறார் விக்ரம். அந்தப் படங்கள் மக்கள் ஞாபகத்திலிருந்து நீங்கும் வரை காத்திருந்த காலம் அது என அந்த நாட்களை விவரிக்கிறார். ஒரு இயக்குநருக்கு இரண்டாவது மூன்றாவது வாய்ப்புகள் எல்லாம் கிடைப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை உணர்ந்துள்ளார்.
"ஒரு படத்தின் தோல்விக்கு இயக்குநர் வேறு யாரையும் பழி சொல்ல முடியாது. அது அவரது குழந்தை போல. அதைப் போராடி ஒழுங்காகக் கொண்டு வரவேண்டியது அவரவரின் பொறுப்பு. இல்லையேல் அவர் தான் முட்டாள்".
மீண்டும் திரைக்கதை எழுத ஆரம்பித்தபோது, அதுவரை எழுதியது போதும் என்ற நிலையிலேயே விக்ரம் இருந்திருக்கிறார். ஆனால் ஒரு சிந்தனை, சுவாரசியமாக இருந்தது என்ற காரணத்தினாலேயே அதை வைத்து கதை எழுத ஆரம்பித்துள்ளார். அது முடிந்ததும் தனது நண்பனான மாதவனை அணுகியுள்ளார்.
"'யாவரும் நலம்' போன்ற ஒரு படம் உருவாக ஒரே காரணம் 'மேடி' (மாதவன்) மட்டுமே. அப்போதுதான் பெரிய கார்ப்பரேட்டுகள் மாநில மொழிப் படங்களை தயாரிக்க ஆரம்பித்திருந்தன. அவர்கள் புதுமையான கதைகளை தேடிக்கொண்டிருந்தார்கள். ஒரு தொலைக்காட்சி தொடரில் இருக்கும் கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் உருவெடுக்கின்றன என்று நான் கூறிய த்ரில்லர் கதையை நான் சொன்னபோது அவர்களுக்கு அது பிடித்திருந்தது. உண்மையில், அதன் தயாரிப்பாளர்கள் தான் (ரிலையன்ஸ் பிக்சர்ஸ்) அதை ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுக்க சொல்லி என்னை கேட்டது".
அந்தப் படம் தேசிய அளவில் வெற்றி பெற்றபோது விக்ரம் குமாருக்கு அவருக்கான இடம் திரைத்துறையில் கிடைத்தது. "நான் தற்போது எடுக்கும் படத்தில் உழைப்பது அனைத்தும் அடுத்த படம் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. 'யாவரும் நலம்' ஹிட்டானவுடன் பலர் என்னை மீண்டும் ஒரு திகில் படம் எடுக்க அணுகினார்கள். ஆனால் மீண்டும் தெலுங்கில் ஒரு காதல் திரைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பினேன். அப்படித்தான் 'இஷ்க்' உருவானது."
அப்போதுதான் நாயகர்களுடன் பணியாற்றும் தனி பாணியும் விக்ரம் குமாருக்கு உருவானது. "'இஷ்க்', 'மனம் படங்களைத் தொடர்ந்து, '24' படமும், அந்தப் பட கதாநாயகனின் தயாரிப்புதான். முதலில் '24' படக் கதையை சொல்லும்போது, சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் ஒரு மணிநேரம் கழித்து என்னை அழைத்து நானே தயாரிக்கிறேன் என்றார். கதையின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கை அதில் தெரிந்தது".
நாயகனே படத்தின் தயாரிப்பாளராக இருப்பதில் கூடுதல் நன்மை இருக்கிறதா என்று கேட்டதற்கு, "கண்டிப்பாக. இன்னும் ஈடுபாடோடும், ஆசையோடும் இருப்பார்கள் ஏனென்றால் அவர்களது பணமும் இதில் இருக்கிறது. அதே போல முடிவுகளும் வேகமாக எடுக்கப்படும். ஆனால் உங்கள் தயாரிப்பாளர் சூர்யா எனும்போது, கண்டிப்பாக அனைத்திலும் நீங்கள் சிறந்ததை தரவேண்டும் என முயற்சிப்பீர்கள். படம் ஓடவில்லை என்று எளிதாக மற்றவரை குறை கூறிவிட முடியாது"
தன்னை உலகின் சோம்பலான எழுத்தாளன் என சொல்லிக்கொள்ளும் விக்ரம் குமார், '24' - சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தைத் தொடர்ந்து ஒரு மருத்துவ த்ரில்லர் படத்தை எடுக்கவுள்ளார். "எனக்கு பல விதமான படங்களை எடுப்பது பிடிக்கும். 'இஷ்டம்' மற்றும் 'இஷ்க்' காதல் படங்கள், 'மனம்' ஒரு குடும்பத் திரைப்படம், 'யாவரும் நலம்' ஒரு திகில் படம். 'அலை' கொடூரமான படம் என்ற விதத்தைச் சேரும். ஆனால் தோல்விகள் தான் எனது பெரிய பொக்கிஷங்கள். வெற்றி உங்கள் கண்களை மறைத்துவிடும். நான் வாழ்க்கையைப் பற்றி கற்றுக் கொண்டவை அனைத்தும் முதல் தோல்விகளுக்குப் பிறகுதான்"
மூன்று மொழிகளிலும் ஒரு ஹிட் படத்தை தந்துள்ள விக்ரம் இப்போதாவது தனது குருவின் பெருமைக்குரிய சிஷ்யனாக மாறிவிட்டாரா எனக் கேட்டால், "'மனம்' பட வெளியீட்டுக்குப் பிறகு ஒரு பார்ட்டியில் பிரியன் சாரை சந்தித்தேன். அவர் என்னை கவனித்தார். ஒரு அடி பின்னால் எடுத்து, உன் படத்தைப் பார்த்தேன், நன்றாக இருந்தது என்று சொல்லி நடந்து சென்றுவிட்டார். இதை தான் நான் கேட்க விரும்பினேன் என்பது அவருக்கு நன்றாக தெரியும்".
© தி இந்து, ஆங்கிலம்