

'ராஜதந்திரம்' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
வீரா, ரெஜினா, சிவா, அஜய் பிரசாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமித் இயக்கத்தில் வெளியான படம் 'ராஜதந்திரம்'. செந்தில் வீராசாமி தயாரித்த இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் விநியோகம் செய்தது. மார்ச் 13, 2015ல் இப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியில் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது இப்படத்தின் 2ம் பாகம் தயாராகவிருக்கிறது. முதல் பாகத்தில் தயாரிப்பாளரான செந்தில் வீராசாமி இரண்டாம் பாகத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
முன்னதாக 'ராஜதந்திரம்' வெளியான மார்ச் 13ம் தேதி அன்று 'ராஜதந்திரம் 2' படத்தின் முதல் 6 நிமிட காட்சிகளை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவில் புதிய முயற்சி. முழு படப்பிடிப்பும் முடியும் முன்னரே முதல் 6 நிமிட காட்சியை மட்டும் இணையத்தில் வெளியிடுவது இதுவே முதல் முறை.
மேலும், இப்படத்தில் முதல் பாகத்தின் நடிகர்களோடு சில முன்னணி நடிகர்களையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.