

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் 'தோழா' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.
வம்சி இயக்கத்தில் நாகார்ஜூன், கார்த்தி, தமன்னா நடித்த 'தோழா' திரைப்படம் மார்ச் 25-ல் வெளியானது. வினோத் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்திருந்தார். பி.வி.பி சினிமாஸ் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரித்தது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. "இரண்டு மொழிகளிலும் தொடர்ச்சியாக நல்ல வரவேற்பு இருந்ததால், முதல் 4 நாட்களில் இப்படம் 20 கோடி வசூல் செய்திருக்கிறது" என்று திரைப்பட வர்த்தகர் த்ரிநாத் தெரிவித்தார்.
"விஜய் நடித்திருக்கும் 'தெறி' வெளியாகும் ஏப்ரல் 2ம் வாரம் வரை இப்படம் திரையரங்கில் இருக்கும் என்பதால் இரண்டு மொழிகளையும் சேர்த்து சுமார் 50 கோடி வரை வசூலிக்கும்" என்றும் த்ரிநாத் குறிப்பிட்டார்.
இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் தயாரிப்பு நிறுவனம் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறது. 'தோழா' படத்தின் ஓரிஜினல் படமான 'தி இன்டச்சபிள்ஸ்' ப்ரெஞ்சு படத்தின் இந்தி உரிமை கரண் ஜோஹரிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.