

இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில், வெளிநாடுவாழ் இந்தியராக நடிக்கும் கார்த்தி பைலட் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார்.
'தோழா' படத்தைத் தொடர்ந்து 'காஷ்மோரா' படத்தில் நடித்துவரும் கார்த்தி, தொடர்ந்து மணிரத்னம் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இதில், 'பிரேமம்' புகழ் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில், இதில் கார்த்தியின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் வெளிநாடுவாழ் இந்தியராகவும், பைலட் வேலையில் இருப்பவராகவும் கார்த்தி நடிக்கிறார். சாய் பல்லவி டாக்டராக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது. 'காஷ்மோரா' படத்துக்காக மொட்டையடித்துள்ள கார்த்தி, முடி வளர்ந்த பின் மணிரத்னம் பட படப்பிடிப்பில் இணைவார் எனத் தெரிகிறது.
ரவிவர்மன் ஒளிப்பதிவும் செய்யும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.