

திரைப்படங்களுக்கு வரிச்சலுகை நீட்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
படப்பிடிப்பு செலவுக்கு பணம் எடுத்து செல்லும் போதும் பிரச்சினை வரும் என்பதால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு ஒன்றை அளித்தார்.
அவர் அளித்த மனு விவரங்கள் குறித்து தாணுவிடம் கேட்ட போது, "தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தேர்தல் ஆணையரைச் சந்தித்து 2 கோரிக்கைகள் வைத்தேன். 'யு' சான்றிதழ் பெறும் படங்களுக்கு கேளிக்கை வரிச்சலுகையை அரசு அளித்து வருகிறது. அதனைத் தேர்தல் காலகட்டத்திலும் நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்றேன்.
மேலும், குறைந்த முதலீட்டு படங்களுக்கு படப்பிடிப்பு செலவுகளுக்காக 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும், பெரிய முதலீட்டு படங்களுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றேன்.
படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்கள் பலருக்கும் சம்பளம் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதால் இதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கண்டிப்பாக எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.