மருத்துவமனையில் கமல்: இந்த வார ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடத்தப் போவது யார்?

மருத்துவமனையில் கமல்: இந்த வார ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடத்தப் போவது யார்?
Updated on
1 min read

விஜய் தொலைகாட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்‌ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்தவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், சீமான் உள்ளிட்டோர் கமல்ஹாசன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.

வாரம் தோறும் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை சந்தித்து உரையாடி, அவர்களிலிருந்து ஒருவரை ஒவ்வொரு வாரமும் எலிமினேட் செய்வார். ஆனால் தற்போது கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்த வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த்ப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

அதே சமயம் இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் உலா வரத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்று சிலர் கூறி வருகின்றனர்.

இன்னும் சிலரோ நாளை ‘மாநாடு’ படம் வெளியாகவுள்ள நிலையில் இதனை விளம்பரப்படுத்தும் விதமாக சிம்பு இந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும் கூறி வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதியின் பெயரும் இந்த பட்டியலில் இருக்கிறது. எனினும் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் நடத்த உள்ளார்கள் என்பது குறித்து விஜய் டிவி தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in