

'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்காக சிம்புவுடன் நடனமாட இருக்கிறார் ஆதா ஷர்மா.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.
இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். மேலும், மார்ச் மாதம் இப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படத்தில் இன்னும் ஒரு பாடல் படமாக்கப்பட இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் டி.ராஜேந்தர் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். நாளை (மார்ச் 9) முதல் 'மாமன் வெயிட்டிங்' என்ற பாடலை சென்னையில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
இதில் சிம்புவுடன் ஆண்ட்ரியா நடனமாட இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இப்பாடலில் சிம்புவுடன் நடனமாட இருக்கிறார் ஆதா ஷர்மா.இப்பாடலுக்கு ராபட் நடனம் அமைக்க இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தெலுங்கு படமான 'ஷனம் (kshanam)' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் ஆதா ஷர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது படமாக்கப்படும் பாடலை இணைத்து முதல் பிரதி தயார் செய்து, படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.