சினிமா அன்று போல் இன்று இல்லை: டி.ராஜேந்தர் கவலை

சினிமா அன்று போல் இன்று இல்லை:  டி.ராஜேந்தர் கவலை
Updated on
2 min read

சினிமா முன்பு போல் இல்லை. நாங்கள் இருந்த காலம் எல்லாம் பொற்காலம். ஆனால், இன்றைக்கு அந்த காலம் போல் இல்லை என்று டி.ராஜேந்தர் கவலையுடன் குறிப்பிட்டார்.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மார்ச் 4ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'போக்கிரி ராஜா'. பி.டி.செல்வகுமார் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 'புலி' படத்திற்கான நஷ்ட ஈடுக்கோரி விநியோகஸ்தர்கள் தரப்பில் 'போக்கிரி ராஜா'வுக்கு சிக்கல் ஏற்பட்டது.

'போக்கிரி ராஜா' படத்தை திட்டமிட்டபடி வெளிக் கொண்டுவர விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இறுதியில் சுமூக முடிவு எட்டப்பட்டு, எவ்வித பிரச்சினையும் இன்றி படம் வெளியாக இருக்கிறது.

பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததை ஒட்டி 'போக்கிரி ராஜா' படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசியது:

"எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். எப்போதுமே தன்னம்பிகை மற்றும் கடவுள் நம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம்.

என் மகனின் பீப் பாடல் இவ்வளவு பிரச்சினையாகும் என்று நினைக்கவில்லை. என் மகன் கோவை சென்ற போது போலீஸார் அவனிடம் 35 கேள்விகள் கேட்டார். அப்போது சிம்பு "பீப் பாடலுக்கு அனிருத்துக்கு சம்பந்தமில்லை" என்று தெரிவித்தார். அவரிடம் "யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா" என்ற கேள்விக்கு "இவர் மீது தான் சந்தேகம் என்று கூறி நான் யார் மனதையும் நோகடிக்க விரும்பவில்லை.

நீங்கள் தான் யார் பதிவேற்றம் பண்ணினால் என்று கண்டுபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார் சிம்பு. அந்த பதிலால் நெகிழ்ந்துவிட்டேன்.

'புலி' படம் வெளியாக பல பிரச்சினைகள் இருந்தது. பட வெளியீட்டுக்கு முதல் நாள் இரவு முதல் படம் வெளியாகும் வரை போராடினோம். அப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி சில இடங்களில் திரையிட முடியாமல் போய்விட்டது. அதற்கு இப்போது சிலர் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். ஆனால், விநியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டம் இல்லாமல் ஓடிய படம் 'புலி'.

இப்போது 'போக்கிரி ராஜா' படத்துக்கு 10 நாட்களுக்கு மேலாக பிரச்சினை தான். விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரிடமும் உட்கார்ந்து பேசி பிரச்சினையை முடித்துவிட்டோம்.

சினிமா முன்பு போல் இல்லை. நாங்கள் இருந்த காலம் எல்லாம் பொற்காலம். ஆனால், இன்றைக்கு அந்த காலம் போல் இல்லை. அனைத்து இயக்குநர்களும் மிகவும் கஷ்டப்பட்டு தான் ஜெயிக்க வேண்டியது இருக்கிறது. சினிமா உலகம் செத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு சோறு போட்டது சினிமா தான். அரசியல் புகழை வைத்து நான் சினிமாவுக்கு வரவில்லை. சினிமா புகழை வைத்து தான் அரசியலுக்கு வந்தேன். அந்த சினிமா நன்றாக இருக்க வேண்டும்.

'போக்கிரி ராஜா' தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் என் நண்பர். அவருக்கு ஒரு கஷ்டம் ஒடி வந்து நின்றேன். சினிமாவில் ஒருவருக்கு கஷ்டம் என்றால் நான் ஒடி வந்து நிற்பேன். 'போக்கிரி ராஜா' 4ம் தேதி வெளியாகி பெரிய வெற்றி பெறும்" என்று தெரிவித்தார் டி.ராஜேந்தர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in