நடிகர் சங்க பொதுக்குழு சென்னையில் இன்று கூடுகிறது: நட்சத்திர கிரிக்கெட் குறித்து ஆலோசனை

நடிகர் சங்க பொதுக்குழு சென்னையில் இன்று கூடுகிறது: நட்சத்திர கிரிக்கெட் குறித்து ஆலோசனை
Updated on
1 min read

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடக் கிறது. இதில் நட்சத்திர கிரிக்கெட் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது. இதில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் நட்சத்திர கிரிக்கெட், நலத்திட்ட பணிகள், கணக்கு வழக்குகள் சரிபார்ப்பு மற்றும் பழைய நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இது தொடர்பாக நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “நாங்கள் பொறுப்பேற்றதில் இருந்து என்னென்ன நலத்திட்ட பணிகளை செய்துள்ளோம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிப்போம். புதிய கட்டிடம் கட்டுவதற்கான திட்டங்களை எடுத்துரைப்போம். அந்த கட்டிடம் மூலமாக எவ்வளவு வருமானம் வரும், அதன் மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைக் குறித்து விளக்குவோம். பழைய நிர்வாகிகள் ஒப்படைத்த கணக்கில் என்ன முறைகேடு நடந்திருக்கிறது என்பதை எடுத்துரைப்போம். நாங்கள் செய்துள்ள செலவுகளின் கணக்கையும் காட்டுவோம்.

இந்த கூட்டத்தில் எங்களுடன் கணக்கு தணிக்கையாளரும் இருப்பார். பிறகு நாடக நடிகர்களுக்கு பென்ஷன் பணத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறோம். சென்னையில் நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டி குறித்தும் அதற்கு முன்னணி நடிகர்களை அழைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிப்போம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in