

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ரஜினி முருகன்' திரைப்படம் 'ராஜ் விஷ்ணு' என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக்காக இருக்கிறது.
பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்த இப்படத்துக்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ஜனவரி 14, 2016ல் வெளியானது.
இப்படம் பெரும் வசூலை வாரிக் குவித்தது மட்டுமன்றி சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் கம்மியான நாட்களில் அதிகமான வசூல் செய்த படம் என்ற பெயரும் பெற்றது. தற்போது 'ரஜினி முருகன்' திரைப்படம் கன்னடத்தில் ரீமேக்காவது உறுதியாகி இருக்கிறது.
ஷரண் மற்றும் சிக்கனா இருவரும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். ராஜ்கிரண் வேடத்தில் நடிக்க அம்பரீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ராமு இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.
ஷரண் மற்றும் சிக்கனா இருவருமே 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் ரீமேக்கான 'ஆத்யக்ஷா' படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தையும் ராமு தான் தயாரித்தார்.