

ஆயிரம் திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் 100 ஓவியர்கள் இணைந்து ஓவியம் வரையும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
சென்னை லயோலா கல்லூரி யில் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இசைக்கு ஏற்றவாறு ஓவியர்கள் ஓவியம் வரைந்து வருகிறார்கள். நேற்றைய நிகழ்ச்சி யில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நடிகர் விஜய் சேதுபதி வர்ணத்தை எடுத்து கொடுத்து இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இரண்டாவது நாளாக இன்றும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் வரையப்படும் ஓவியங்கள் அனைத்தும் விரைவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. மேலும், இந்த ஓவியங்கள் அனைத்தும் புத்தகங்களாக வெளியிடப்பட உள்ளன.