

விவசாயிகள் பிரச்சினையை மையப்படுத்திய கதை ஒன்றை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
'விசாரணை' படத்தைத் தொடர்ந்து தனுஷை நாயகனாக வைத்து 'வடசென்னை' படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் வெற்றிமாறன். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'வடசென்னை' படத்தைத் தொடர்ந்து, விவசாயிகள் பிரச்சினையை மையப்படுத்தி படமொன்றை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். இதற்காக 'ஷூஸ் ஆஃப் த டெட்' என்ற நாவலின் உரிமையை வாங்கியிருக்கிறார். இந்நாவலை தழுவி விவசாயிகள் பிரச்சினையைப் படமாக்க இருக்கிறார் வெற்றிமாறன்.
'ஷூஸ் ஆஃப் த டெட்' நாவல் பற்றிய குறிப்பு:
மூத்த பத்திரிகையாளர் கோட்டா நீலிமா எழுதிய அரசியல் நாவல்தான் ‘ஷூஸ் ஆஃப் த டெட்’. மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதி விவசாயிகளின் தற்கொலைகளுக்குப் பெயர் போனது. அதை அடிப்படையாக வைத்து ஏற்கெனவே ஆமிர் கான் தயாரிப்பில் வெளிவந்த ‘பீப்லி லைவ்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன் மட்டுமல்லாமல் பலருடைய மனசாட்சியையும் அசைத்துப்பார்த்தது. கோட்டா நீலிமாவின் இந்த நாவலின் மையமும் விவசாயி ஒருவரின் தற்கொலைதான். தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் சகோதரன் அமைப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம், கொடூரமான கந்துவட்டிக்காரர்கள், மனசாட்சியற்ற இடைத்தரகர்கள், செல்வாக்குள்ளோருக்கு அடிபணிந்து நடக்க வேண்டிய நிலைக்கு ஆளான மாவட்ட ஆட்சியர்கள் என்று பயணிக்கும் இந்த நாவல் நம்முள் பல கேள்விகளை எழுப்பக்கூடியது. விவசாயிகளின் பிரச்சினைகள், தற்கொலைகளைப் பற்றிப் பல ஆண்டு காலம் செய்திக்கட்டுரைகள் எழுதிவந்த அனுபவத்தின் அடிப்படையில் கோட்டா நீலிமா எழுதிய நாவல் இது.