

'இது சினிமா கிடையாது, நிஜமான வாழ்க்கை. இங்கெல்லாம் யாரையாவது எதாவது செஞ்சிட்டு, இடத்தை விட்டு ஸ்லோமோஷன்ல நகரமுடியாது!' இது வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் 'என்று தணியும்' படத்தில் வரும் இந்த வசனம் ஏற்கெனவே பொய்யென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தில் கவுரவக்கொலையால் பாதிக்கப்பட்டவரான கதாநாயகி அமுதா சொல்கிறார். 'சாதிங்கறது கடவுள் மாதிரி. அதுக்கு எல்லா சக்தியும் இருக்கு'. இதே வார்த்தைகள், உண்மைக்கும் பொருந்தி நிற்கின்றன.
படத்தில் அமுதாவின் காதலன் தங்கதுரையும், சாதி கவுரவத்துக்கு இரையாகிறார்.
இதுகுறித்துப் பேசிய படத்தின் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், "இது உண்மைக்கதை அல்ல. உண்மைகளின் கதை. படத்தின் பேசுபொருள் கவுரவக்கொலைகள்தான் என்றாலும், அதைத்தாண்டி சில விஷயங்களும் படத்தில் இருக்கின்றன. இரட்டை டம்ளர் முறை, பெண்களை அடிமையாக்கிப் பார்க்கும் சமூகம், அடிமை ஆக்குபவர்களுக்கும், ஆக்கப்படுபவர்களுக்கும் இடையில் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளிட்டவைகளைப் பற்றியும் பேசுகிறது.
படம், சினிமாத்தனமான காட்சிகளாலும், ரொமான்டிக் காட்சிகளாலும், உண்மைத்தன்மையை இழந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். படத்தில் நடிப்பவர்கள் யாருக்குமே மேக்கப் கிடையாது. முழுமையாகாத காட்சிகள் படத்தில் இருக்கலாம். ஆனால் படத்தில் நடித்தவர்கள் அனைவருமே புதுமுகங்கள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்கிறார்
போலீஸ் துறையில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து, வாச்சாத்தி என்ற ஆவணப்படத்தை எடுத்த கிருஷ்ணகுமார், லோ-பட்ஜெட் படமான இதை, 40 நாட்களில் எடுத்து முடித்ததாகக் கூறுகிறார்.
கைக்குழந்தையான தனது தம்பியைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி அக்கா அமுதாவின் படிப்பை நிறுத்துவதில் தொடங்குகிறது படம். அப்பா தினமும் சீட்டு விளையாடி, குடித்தே சம்பாதிக்கும் பணத்தை அழிக்கிறார். அமுதாவின் அம்மா வேலைக்குச் செல்ல, அமுதா குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறார்.
கொஞ்சம் வளர்ந்த பிறகு, தன் தம்பி மதியைப் படிக்க வைப்பதற்காக சீமை கருவேல மரத்தை வெட்டும் பணிக்குச் செல்கிறார். அங்கே மேற்பார்வையாளராக இருக்கும் வேற்று சாதியைச் சேர்ந்த தங்கதுரையோடு, அமுதாவுக்குக் காதல் மலர்கிறது.
அவர்கள் இருவரும் கிராமத்தை விட்டு வெளியேறும்போது பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரின் ஆட்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். தன் அக்காவின் கொலைக்காகப் பழிவாங்க நினைக்கிறான் மதி.
சமூகக் கருத்தோடு எடுக்கப்படும் சினிமா படங்கள் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு, 'இந்தப் படம் யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களைச் சென்றடைந்தாலே போதும்; அதுவே வெற்றிதான்' என்கிறார் பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார்.
தமிழில்: ரமணி பிரபா தேவி