‘தலைவணங்குகிறேன்' - 'ஜெய் பீம்' படக்குழுவுக்கு மாதவன் பாராட்டு

‘தலைவணங்குகிறேன்' - 'ஜெய் பீம்' படக்குழுவுக்கு மாதவன் பாராட்டு

Published on

'ஜெய் பீம்' படக்குழுவுக்கு நடிகர் மாதவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் மாதவன் ‘ஜெய் பீம்’ படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

சில படங்களே நம்மை சுற்றி நடப்பவை குறித்தும், மந்தமான நமது இருப்பு குறித்தும் நம் கோபத்தை தூண்டச் செய்யும். ‘ஜெய் பீம்’ படம் அப்படித்தான் எனக்குச் செய்தது. அற்புதமான, விறுவிறுப்பான, சிந்தையை தூண்டக்கூடிய இப்படம் தனது நோக்கத்தில் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. சூர்யா ப்ரோ, உங்களுக்கு தலை வணங்குகிறேன். அற்புதமான நடிப்பு, மற்ற கதாபாத்திரங்களுக்கான காட்சிகளிலும், அவர்கள் பேசும்போதும், நீங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றது மிகவும் பிடித்திருந்தது. ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போயுள்ளேன்.

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க திரைப்படத்தை உருவாக்க ஒவ்வொரு துறைக்கும் மிக அற்புதமான முறையில் பொருத்தமான ஆட்களை தேர்வு செய்துள்ளீர்கள். நமக்கு ஒரு அற்புதமான நடிகர் கிடைத்து விட்டார். அவரது கதைசொல்லல் முறையும், நுணுக்கங்களும் அபாரம். உங்களுக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய பாராட்டுக்கள். உலகமே கொண்டாடும் வேளையில் எழுந்து நின்று தலைவணங்குகிறேன்.

இவ்வாறு மாதவன் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in