திரை விமர்சனம் - அண்ணாத்த

திரை விமர்சனம் - அண்ணாத்த
Updated on
1 min read

தங்கை சென்டிமென்ட் ரஜினிக்கு புதிதல்ல. ‘முள்ளும் மலரும்’ காளியின் முரட்டுப் பாசம் தலைமுறைகள் கடந்தும் இன்றும் பேசப்படுகிறது. ஆனால், அதே ரஜினியை, எந்த புதுமையும் இல்லாத ‘டெம்பிளேட் அண்ணாத்த’வாக பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது.

கிராமத்தில் ரஜினியை சீண்டஒரு வில்லன், நகைச்சுவை என்கிற பெயரில் பண்பாட்டை இழிவுபடுத்துவது, கொல்கத்தாவில் கீர்த்தி சந்திக்கும் பிரச்சினை, அதற்கு காரணமாக இருக்கும் மேலும் இரண்டு வில்லன்கள், மாஸ்மசாலா நாயகனுக்கு ஊறுகாய்போல உதவும் கதாநாயகி, ஆக்‌ஷன் காட்சிகளில் வீச்சரிவாள், இரும்பு ராடுகள், இரும்பு சங்கிலிகள், பாம் பிளாஸ்ட்களில் வெடித்துசிதறும் வாகனங்கள், அச்சுப் பிசகாத தமிழ் சினிமா சேஸிங் என பார்த்துச் சலித்த காட்சிகளை‘ரீடச்’ செய்து பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சிவா.

ரஜினி நடிப்பில் குறைசொல்ல ஏதுமில்லை. ஆனால், அவரது கண்களில் வெளிப்படும் சோர்வை ஒப்பனையால் முழுவதுமாக மறைக்க முடியவில்லை.சொந்தகிராமத்தில் ஊராட்சிப் பணிகளைத்தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் ரஜினியால், பிரகாஷ்ராஜ் புதுமனிதனாக மனம் மாறும்காட்சி உருப்படியாக இருக்கிறது.அதேபோல, கார்ப்பரேட் வில்லனை, அவனது ஆட்களைக் கொண்டே கணக்கைமுடிக்க முயலும் ‘அண்ணாத்த’யும், அண்ணன் -தம்பி வில்லன்கள் இடையில் நீடிக்கும் ரத்தம் தோய்ந்த சென்டிமென்ட்டும் எடுபடுகின்றன.

நயன்தாரா, சில காட்சிகளில் ரஜினிக்கு உதவிசெய்து, ஒரு டூயட் பாடலில் தோன்றி வசீகரிக்கிறார். கீர்த்தி சுரேஷ் முடிந்த அளவுக்கு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். கொல்கத்தாவில் அவர் கஷ்டப்படும் காட்சிகள் கொஞ்சம் உருகவைக்கின்றன. ஜெகபதிபாபுவும்கூட, டைகட்டிக்கொண்டு வந்தாலும், அழுக்கான வில்லனாக வந்தாலும் தன்னளவில் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

ஓவர்டோஸ் ‘ஆக்‌ஷன் பிளாக்’குகள் ரஜினி என்ற பிம்பத்தால் ஓரளவு தியேட்டருக்குள் நம்மைக் காப்பாற்றுகின்றன என்றால்.. டி.இமான் இசையும் இருக்கையில் கொஞ்சம் பொறுமையுடன் நம்மை இருத்தி வைக்கிறது.

தங்கையின் நலனுக்காக அரிவாள் தூக்கும் பழைய மாஸ் ஹீரோ படங்களில் இனிமேல் எதை தொலைக்காட்சியில் பார்த்தாலும், ‘அண்ணாத்த’க்கு எவ்வளவோ மேல் என்று தோன்றுவது உறுதி.

கூடிய விரைவில் ஒரு நல்ல படத்தை தன் ரசிகர்களுக்காக கொடுத்து கணக்கை சரிசெய்துகொள்வது ரஜினிக்கு நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in