

தமிழக முதல்வர் வழங்கியிருப்பது பட்டா அல்ல; புதிய நம்பிக்கை என்று சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
கோயில்களில் தினசரி அளிக்கப்பட்டு வரும் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து மாமல்லை தலசயனப் பெருமாள் கோயில் அன்னதானத்தில் நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினியை அருகே அமர்த்தி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உணவருந்தியதற்குப் பாராட்டுகள் குவிந்தன.
நேற்று (நவம்பர் 4) குறவர் மற்றும் இருளர் பழங்குடியின மக்களுக்கான 4.5 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில் முதல்வருக்கு ஊசிமணி மாலை அணிவித்து அஸ்வினி மரியாதை செலுத்தினார். பின்பு மேடையில் சில நிமிடங்கள் பேசினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த குடியிருப்புகளுக்குச் சென்று பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில் அஸ்வினி வீட்டுக்கும் சென்றார்.
இதன் புகைப்படங்கள், வீடியோக்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் "அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல, மரியாதை" என்று குறிப்பிட்டார். தமிழக முதல்வரின் இந்தச் செயலுக்கு இணையத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக முதல்வரின் ட்வீட்டைக் குறிப்பிட்டு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எளிய பழங்குடி மக்களின் இல்லம் தேடிச் சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாகத் தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும், எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களைப் பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளித் திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய முதல்வருக்கு உளமார்ந்த நன்றி".
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
மேலும், 'ஜெய் பீம்' படத்தைத் தயாரித்த 2டி நிறுவனமும் தங்களது ட்விட்டர் பதிவில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.