

'அண்ணாத்த' படத்துக்கு வசூல் ரீதியாக வரவேற்பு கிடைத்திருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைத் தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. நேற்று (நவம்பர் 4) வெளியான இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். காலை 4 மணிக்கே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாக எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செம்பியன் தனது ட்விட்டர் பதிவில், " 'அண்ணாத்த' படத்துக்கு அட்டகாசமான ஓப்பனிங் மற்றும் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு. அனைவருக்கும் நன்றி மற்றும் தீபாவளி நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செண்பகமூர்த்தி தனது ட்விட்டர் பதிவில் "சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய ஓப்பனிங்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வசூல் ரீதியான வரவேற்பு குறித்து இயக்குநர் சிவா, "சாய் சாய்.. 'அண்ணாத்த' படத்தின் வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், சன் பிக்சர்ஸ், ஊடக நண்பர்கள், சினிமா விரும்பிகள், என்னுடைய அன்பான குடும்ப ரசிகர்கள், என்னுடைய டீம், என்னுடைய குடும்பம் அனைவருக்கும் நன்றிகள்" எனத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சில திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய ட்விட்டர் பதிவில் நேற்றைய மக்கள் கூட்டத்தைப் புகைப்படமாக வெளியிட்டு, பெரிய வசூல் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளனர்.