நடிகர்கள் நல்லவர்களாகக் காட்டிக் கொள்ளாவிட்டால் தூக்கம் வராது; நாங்கள் கெட்டவர்கள்தான்: மிஷ்கின்
நடிகர்கள் தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ளாவிட்டால் அவர்களுக்குத் தூக்கம் வராது. நாங்கள் கெட்டவர்கள்தான் என்று இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரிப்பு, நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'துப்பறிவாளன் 2'. லண்டனில் இதன் படப்பிடிப்பின்போது மிஷ்கின் - விஷால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார் மிஷ்கின்.
'துப்பறிவாளன் 2' படத்தைத் தானே இயக்கி, தயாரித்து, நடிக்கவுள்ளதாக விஷால் அறிவித்தார். ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. மிஷ்கின் - விஷால் இருவருமே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதனிடையே, நேற்று (நவம்பர் 2) சென்னையில் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் மிஷ்கின்.
அதில் அவர் பேசியதாவது:
"கடந்த வாரம் நடந்த கொடூரமான ஒரு விஷயம் புனித் ராஜ்குமார் தவறியது. அந்தக் குழந்தை இன்னும் 60 வயது வாழ வேண்டிய குழந்தை. நிஜ வாழ்க்கையிலும் நாயகனாக வாழ்ந்தவர். ஒரு முறை சந்தித்து நான் ஒரு கதையைக் கூறினேன். பெரிய பட்ஜெட் ஆக இருக்கிறது சார், சின்ன பட்ஜெட்டில் ஒன்று பண்ணலாம் என்று சொன்னார். அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கவே இல்லை. அவர் மறைவு இந்திய சினிமா துறைக்கே பேரிழப்பு.
விஜய் நடித்த 'யூத்' படத்தின் மூலமாகத்தான் எனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினேன். அவருடைய இந்த உயரத்துக்குக் காரணம் உழைப்பு மட்டுமே. "ஆல்தோட்ட பூபதி" பாடல் படப்பிடிப்பின்போது அவருக்கு முதுகில் பயங்கர அடி. சிம்ரனுடன் அந்த வலியுடனே சிறப்பாக ஆடினார்.
அனைவருமே என் குடும்பம்தான். ஏன் விஷால் உட்பட. அவரும் திட்டினார், நானும் திட்டினேன், முடிந்துவிட்டது. நடிகர்கள் எப்போதுமே அவர்களை நல்லவர்கள் எனக் காட்டிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தூக்கம் வராது. நாங்கள் எழுத்தாளர்கள், இயக்குநர்கள் கெட்டவர்கள்தான்.
இனிமேல் விஷாலைப் பற்றி நான் எதுவும் பேசமாட்டேன். அவரும் பேச மாட்டார் என நினைக்கிறேன். ரொம்ப அன்பிற்கினியவன் விஷால். ஒரு வேளை நான் விட்டு வந்துவிட்டதால் என் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். நான் தவறாக ஏதேனும் செய்திருந்தால் மன்னிப்பு கேட்பதில் தவறே இல்லை".
இவ்வாறு மிஷ்கின் பேசினார்.
