'நாம் இருவர் நமக்கு இருவர் 2' தொடரிலிருந்து ரக்‌ஷிதா விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி

'நாம் இருவர் நமக்கு இருவர் 2' தொடரிலிருந்து ரக்‌ஷிதா விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

'நாம் இருவர் நமக்கு இருவர் 2' தொடரிலிருந்து ரக்‌ஷிதா விலகுவதாக அறிவித்திருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

'பிரிவோம் சந்திப்போம்', 'சரவணன் மீனாட்சி 2', 'சரவணன் மீனாட்சி 3' உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரக்‌ஷிதா. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நாம் இருவர் நமக்கு இருவர் 2' தொடரில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதில் மிர்ச்சி செந்திலுடன் நடித்து வந்தார் ரக்‌ஷிதா. 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர், தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது 'நாம் இருவர் நமக்கு இருவர் 2' தொடரிலிருந்து விலகுவதாக ரக்‌ஷிதா அறிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரக்‌ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

"புதிதாக என்னைப் பின்தொடர்பவர்களுக்கு நன்றி, வரவேற்கிறேன். சில சமயங்கள் எப்போது நாம் நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதைத்தான் நான் செய்திருக்கிறேன். 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் இனி நான் இல்லை என்பது உங்களில் பல பேருக்கு ஏமாற்றம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், எனது சூழலையும் புரிந்து எனது முடிவை ஏற்றுக் கொள்ளும்படி உங்களைக் கேட்கிறேன்.

உங்களுக்கு ஏமாற்றம் தந்ததற்கு மன்னித்து விடுங்கள். கண்டிப்பாக எனக்கும் வருத்தம்தான். ஆனால், பல நேரங்களில் மதிப்பற்றவளாக நான் உணர்ந்தேன். இனி எனது இருப்பு தொடருக்குத் தேவையில்லை என்று நினைத்தேன். மேலும் நான் இருக்கிறேனோ, இல்லையோ அதனால் அவர்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் இந்த முடிவை எடுத்தேன்.

ஆம், எப்படியும் கடைசியில் அது கற்பனைக் கதாபாத்திரம், அவ்வளவுதான். எனவே, பெரிதாக எதையும் நினைக்க வேண்டாம். நமக்கிருக்கும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவோம். மேலும் நிகழ்ச்சி எப்படியும் தொடர வேண்டும். எனவே என்றும்போல 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடருக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்".

இவ்வாறு ரக்‌ஷிதா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in