

வசூல் ரீதியாக 'டாக்டர்' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், அர்ச்சனா, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'டாக்டர்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
'டாக்டர்' படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை புரிந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்டதாக வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். தமிழகத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் 'ரெமோ' தான் அதிக வசூல் செய்துள்ளது. அந்தப் படத்தின் வசூலை 'டாக்டர்' கடந்துவிட்டது.
இந்த வசூலால் சிவகார்த்திகேயன் அடுத்த படங்களின் வர்த்தகம் பெரிய அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தீபாவளி அன்று சன் டிவியில் 'டாக்டர்' ஒளிபரப்பாகும் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், திரையரங்குகளில் இப்போதும் மக்கள் கூட்டம் இருக்கிறது. இதனால் தீபாவளிக்குள் 100 கோடி வசூலைத் தாண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா இரண்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 'டாக்டர்' படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பால் சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.