391 பாடல் வரிகளைக் கொண்டு வரையப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் ஓவியம்: கேரளப் பெண் சாதனை

391 பாடல் வரிகளைக் கொண்டு வரையப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் ஓவியம்: கேரளப் பெண் சாதனை
Updated on
1 min read

391 பாடல் வரிகளைக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் ஓவியத்தை வரைந்து கேரளப் பெண் சாதனை படைத்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் சந்திரன். தனியார் கல்லூரியில் பயிற்சியாளராக இருக்கிறார். இவரது மனைவி சூர்யா. இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட சூர்யா, திருமணத்துக்குப் பிறகு நீண்ட நாட்களாக ஓவியம் வரையாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஓவியம் வரைதலை மீண்டும் தொடங்கிய சூர்யா புதுமையாக ஒன்றைச் செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் ஓவியத்தை அவர் இசையமைத்த பாடல் வரிகளைக் கொண்டு வரைய முடிவு செய்துள்ளார்.

அதன்படி ‘ரோஜா’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் தொடங்கி, பிரபலமான 391 பாடல்களின் வரிகளைக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் ஓவியத்தை வரைந்துள்ளார். ‘பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாளனே’ பாடல் வரிகளைக் கொண்டு கண்களை வரைந்துள்ளார். சுமார் 76 மீட்டர் நீளமும், 56 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஓவியத்தை முழுமையாக வரைந்து முடிக்க சூர்யா எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே.

இந்த ஓவியத்தைப் படம்பிடித்த சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானையும் டேக் செய்திருந்தார். அது பலராலும் பகிரப்பட்டு இணையத்தில் பெரும் வைரலானது. தற்போது இந்த ஓவியம் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தச் செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in