இறைவன் அருளால் அப்பா இப்போது நலமாக இருக்கிறார்: சவுந்தர்யா ரஜினிகாந்த்

இறைவன் அருளால் அப்பா இப்போது நலமாக இருக்கிறார்: சவுந்தர்யா ரஜினிகாந்த்
Updated on
1 min read

இறைவன் அருளால் அப்பா இப்போது நலமாக இருக்கிறார் என சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (28.10.21) இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினி நலமாக இருப்பதாகவும், கூடிய விரைவில் வீடு திரும்புவார் என்று அவருடைய குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார்கள்.

ஆனால், ரஜினிக்கு என்ன பிரச்சினை, சிகிச்சை உள்ளிட்ட விவரங்கள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது முதன்முறையாக காவேரி மருத்துவமனை ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் காவேரி மருத்துவமனை கூறியிருப்பதாவது:

"அக்டோபர் 28, 2021 அன்று, தலைசுற்றல் காரணமாக ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறந்த மருத்துவர் குழு அவரது உடல் நலனை முழுமையாக ஆராய்ந்து, ரத்தத்தில் அடைப்பை நீக்கும் சிகிச்சையை (carotid artery revascularization) பரிந்துரைத்துள்ளது. இன்று (29 அக்டோபர் 2021) அந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ரஜினிகாந்த் நன்றாகத் தேறி வருகிறார். இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்குத் திரும்புவார்".

இவ்வாறு காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "இறைவன் அருளால், உங்கள் அனைவரின் அன்பால் அப்பா இப்போது நலமாக இருக்கிறார். இன்று புனித் ராஜ்குமார் மறைவு இதயத்தை நொறுங்கச் செய்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in