மூன்று மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக நடந்த யாஷிகா: இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி

மூன்று மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக நடந்த யாஷிகா: இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி
Updated on
1 min read

விபத்து நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, தான் முதல் முறையாக நடந்துள்ளதாக யாஷிகா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டைக் கவிழ்ந்து கடும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாஷிகாவுக்கு இடுப்பு, கால் ஆகியவற்றில் எலும்புகள் உடைந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிட்டாலும் படுக்கையிலேயே இருந்து வந்தார். தனது தோழியின் மரணம் குறித்து அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் விபத்து நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக, தான் நடந்துள்ளதாக யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் உதவியுடன் தான் நடக்க முயலும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

அதில், ''குழந்தை நடை. 95 நாட்கள் நம்பிக்கை, பிரார்த்தனை மற்றும் உறுதி. விரைவில் எந்தவிதத் துணையும் இன்றி வலிமையாக நடப்பேன் என்று நம்புகிறேன். என்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களுக்கு நன்றி'' என்று யாஷிகா பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் யாஷிகா விரைவில் முழுமையாக குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in