

'இடிமுழக்கம்' படத்தை முடித்துவிட்டு, தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் சீனு ராமசாமி.
ஜி.வி.பிரகாஷ், காயத்ரி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'இடிமுழக்கம்' படத்தை இயக்கி முடித்துள்ளார் சீனு ராமசாமி. விரைவில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், சரியான வெளியீட்டுத் தேதிக்காகவும் காத்திருக்கிறது.
இதனிடையே தனது இயக்கத்தில் மூன்று படங்கள் தயாராக இருப்பது தொடர்பாக சீனு ராமசாமி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'இடிமுழக்கம்', 'மாமனிதன்', 'இடம் பொருள் ஏவல்' வெண்திரைக்கு வருவது உறுதி. என் பணி அதில் நிறைவானது. இனி விமர்சகர்கள், மக்கள் இருவருக்குமே அது பொதுவானது. 'அடுத்து என்ன' அதுதான் வாழ்வின் உயிர்ப்பான கேள்வி. அதற்குத் தொடங்கியது இன்னொரு வேள்வி. உங்கள் அன்பைப் பெறுதலே தலையாய நோக்கம்".
இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ள சீனு ராமசாமி, அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தயாரிப்பாளர் யார் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை.