தயாரிப்பாளராக அறிமுகமாகும் அமலாபால்: 'கடாவர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தயாரிப்பாளராக அறிமுகமாகும் அமலாபால்: 'கடாவர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார் அமலாபால். அவருடைய தயாரிப்பில் உருவாகும் 'கடாவர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இன்று (அக்டோபர் 26) அவருடைய பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டுப் பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, தயாரித்து வரும் 'கடாவர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் அமலாபால். 'கடாவர்' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு, தயாரிப்பாளர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அக்‌ஷய் குமார்.

தயாரிப்பாளர் ஆனது குறித்து அமலாபால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நான் இந்தத் துறையில் 12 வருடங்கள் / 144 மாதங்கள் / 4,380 நாட்களாக நடிகையாக இருக்கிறேன். என்னைச் செம்மைப்படுத்திய, பயனுள்ள 12 வருடங்களாக அவை இருந்தன. தற்போது புதிய வகை வேலையைச் செய்யக்கூடிய வகையில் றெக்கை முளைத்திருக்கிறது. நான் எனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகிறேன்.

நீங்கள் ஒவ்வொருவரும் எனது இந்த முயற்சியில் எனக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. இந்தப் புதிய துறையில் 'கடாவர்' திரைப்படத்துடன் நடை பழக ஆரம்பித்திருக்கிறேன்.

தடயவியல் துறை சம்பந்தப்பட்ட இந்த த்ரில்லர் படத்தில் அறுவை சிகிச்சை நிபுணர் என்கிற கதாபாத்திரம் மையமாக இருக்கும். இந்த முதல் பார்வை எனக்கு நானே கொடுக்கும் பரிசு. இந்த பிரபஞ்சம் எனக்காக வைத்திருக்கும் எல்லா அனுபவங்களுக்கும் நான் தயாராக இருக்கிறேன்".

இவ்வாறு அமலாபால் தெரிவித்துள்ளார்.

'கடாவர்' படத்தை அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார். இதில் அமலாபால் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடித்துள்ளார். அவருடன் அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன், ரித்விகா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக ரஞ்சின் ராஜ், ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங், எடிட்டராக ஷான் லோகேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in