

தனது படைப்புகளால் பார்வையாளர்களைக் கவர்கிறார் என்று தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியத் திரையுலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. 2019-ம் ஆண்டிற்கான இந்த விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த விருதை வழங்கினார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருமே எழுந்து நின்று ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு முறையும் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக் குறைவு. ஆனால், தலைவர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அதைச் செய்கிறார். தனது படைப்புகளால் பார்வையாளர்களைக் கவர்கிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.