

'மாநாடு' டப்பிங்கில் ஏற்பட்ட சிரமம் தொடர்பாக எஸ்.கே.சூர்யா பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 'மாநாடு' படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் எஸ்.ஜே.சூர்யா கலந்துகொண்டு தனது டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'மாநாடு' படத்தில் என் கதாபாத்திரத்துக்காக 8 நாட்களில் முடிக்க வேண்டிய டப்பிங்கை 5 நாட்களில் முடித்திருக்கிறேன். என் நாடி, நரம்பு, கழுத்து, முதுகுத் தண்டு, என் தொண்டை என அனைத்தும் உடைந்துவிட்டன.
குறைந்தது 10 நாட்களாவது ஓய்வு கொடு என்று அவை கெஞ்சுகின்றன. கடுமையான வேலை, அவ்வளவு வலி. ஆனால், கடைசியில் படத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது, உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்றுதான். நவம்பர் 25 தான்டா தீபாவளி".
இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.