

13 ஆண்டுகள் கழித்து 'பாய்ஸ்' படத்தில் நடித்த நடிகர்கள் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், நகுல், மணிகண்டன், தமன், விவேக் ஆகியோர் இணைந்து நடித்த படம் 'பாய்ஸ்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்தார் ஏ.எம்.ரத்னம். படம் வெளியான உடன் பெரும் சர்ச்சையில் சிக்கியதால், போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில், இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் என்று பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறார்கள். இப்பேச்சுவார்த்தை குறித்து தமன் "13 ஆண்டுகள் கழித்து 'பாய்ஸ்' குழுவினர் மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்புகிறோம். அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. விவரங்கள் விரைவில்.." என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தை 'சேதுபதி' படத்தைத் தயாரித்த வன்சன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தான உடன், படத்தின் இயக்குநர், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்..