ஆஸ்கரில் போட்டியிட இந்தியா சார்பாக ’கூழாங்கல்’ பரிந்துரை: தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பெரும் கவுரவம்

ஆஸ்கரில் போட்டியிட இந்தியா சார்பாக ’கூழாங்கல்’ பரிந்துரை: தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பெரும் கவுரவம்
Updated on
1 min read

இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு 'கூழாங்கல்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கூழாங்கல்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தைப் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வருகிறது படக்குழு.

பல்வேறு பிரபலமான சர்வதேச திரைப்பட விழாக்களில் 'கூழாங்கல்' திரையிடப்பட்டு விருதையும் வென்று வருகிறது. அந்த வரிசையில் இப்போது இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு 'கூழாங்கல்' படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பெரும் கவுரவமாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விசாரணை' படம் அனுப்பப்பட்டது. அதற்குப் பிறகு 'கூழாங்கல்' தான் பரிந்துரைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய அரசாங்கம் சார்பில் படக்குழுவினருக்கு இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அயல்நாட்டு / சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரைக்கப்படும். அதற்கு இந்தியாவில் வெளியான படங்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதில் வித்யா பாலன் நடித்த ‘ஷெர்னி’, விக்கி கவுஷல் நடித்த ‘சர்தார் உதம்’, மலையாளத்தில் மார்ட்டின் ப்ரகத் இயக்கிய ‘நாயாட்டு’, தமிழிலிருந்து ‘மண்டேலா’, 'கூழாங்கல்' ஆகிய படங்கள் போட்டியிட்டன.

இந்தப் படங்களை இயக்குநர் ஷாஜி என்.கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு பார்வையிட்டது. அதிலிருந்து 'கூழாங்கல்' படம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in