

நடிகர் கலாபவன் மணி ஒரு முழுமையான நடிகர் என நடிகர் விக்ரம் பேசியுள்ளார். அண்மையில் மறைந்த நடிகர் கலாபவன் மணிக்கு நடந்த அஞ்சலி கூட்டத்தில் நடிகர் விக்ரம் இவ்வாறு பேசினார்.
விக்ரம் பேசும்போது, " மணி இறந்த செய்தியைக் கேட்டவுடன் எல்லோரையும் போல நானும் அதிர்ச்சியுற்றேன். அவர் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சினிமா ஒரு கனவுலகம். சிலருக்கு அந்த கனவு நனவாகியுள்ளது. நமது கனவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை நம்மால் அடைய முடியும் என்பதைத் தான் மணி நமக்குக் காட்டிச் சென்றிருக்கிறார். எளிமையான நிலையில் தொடங்கி, சிறந்த நடிகரான மணியின் வாழ்க்கைக் கதை என்னைப் போன்ற பலருக்கும் ஊக்கம் தரும் ஒன்றாகும்.
வாசந்தியும், லக்ஷ்மியும், பின்னே ஞானும் படம் மூலமாகத்தான் மணியை எனக்குத் தெரியும். சிறந்த கதை, சிறந்த கதாபாத்திரங்கள் என்று தோன்றியது. ஆனால் நிஜமாகவே பார்வையில்லாத ஒருவரைப் போல, அவ்வளவு சிறப்பாக நடித்து, அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்த மணியின் நடிப்பைப் பார்த்து நான் வியந்தேன். அப்போதே இந்தப் படத்தை நான் தமிழில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அந்தப் படத்துக்குப் பிறகு, தமிழகத்தில் எங்கு போனாலும், 'காசி'யில் நன்றாக நடித்தீர்கள் எனப் பாராட்டுவார்கள். அப்போதெல்லாம் எனக்கு மணியும், அவரது நடிப்பும் தான் கண் முன் நிற்கும். அந்த நடிப்புக்காக எனக்கு வந்த பாராட்டுகள் அனைத்தும் மணியையே சேரும்.
பிறகு என்னுடன் 'ஜெமினி' படத்தில் வில்லனாக நடித்தார். அந்தப் படத்தின் பாடல்கள், கதை என பல விஷயங்கள் சிறப்பாக அமைந்தும், ஏதோ ஓர் அம்சம் குறைவதாக நானும் இயக்குநரும் நினைத்தோம். வேறென்ன செய்யலாம், க்ளைமேக்ஸை மாற்றலாமா என்றெல்லாம் யோசித்தோம். அப்போது ஒரு நாள் படப்பிடிப்புன் மதிய உணவு இடைவேளையில், மணியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மிமிக்ரி செய்வார் என்பது நியாபகத்துக்கு வந்து, அவரை செய்து காட்டச் சொன்னோம். அவர் தனக்குத் தெரிந்த அனைத்தையும் செய்தார். நாங்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தோம்.
கேரளத்தில் அனைவருக்கும் அவரது திறமை பற்றி தெரியும். ஆனால் அப்போது அவர் தமிழுக்கு புதுசு. இங்கு யாருக்கும் அவரைப் பற்றி சரியாகத் தெரியாது. அவர் மிமிக்ரி செய்து முடித்தவுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் கைதட்டிப் பாராட்டினர். அப்போது இயக்குநர், வில்லன் பாத்திரம் மிமிக்ரி செய்வதைப் போல வைத்துக் கொள்ளலாம் என யோசனை சொன்னார். நானும் சரி என்று சொன்னேன். அடுத்து நாங்கள் ஒரு காட்சியைப் படமாக்கினோம். அதுதான் நடிகர் முரளியுடன் நானும் மணியும் நடித்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி.
அந்தக் காட்சியின்போது, ஒரு பாம்பைப் போல, ஒட்டகத்தைப் போல மிமிக்ரி செய்து அசத்தினார். அந்தக் காட்சியின் படப்பிடிப்பின்போது, இந்தப் படம் பெரிய ஹிட்டாகும் என எனக்கு ஒரு நம்பிக்கைப் பிறந்தது. அதற்கு ஒரே காரணம் மணியின் நடிப்பு. அந்த பாத்திரத்துக்குள் அவர் செய்த மாயம் அது. இந்தப் படம் மட்டுமல்ல. அவர் நடித்திருந்த எல்லாப் படங்களிலும் அவர் ஒரு மாயம் செய்திருப்பார்.
மம்முட்டி பேசும்போது மிகச்சரியாக சொன்னார். மணி ஒரு மலையாள நடிகரோ, கேரளத்து நடிகரோ, தமிழ் நடிகரோ அல்ல. அவர் ஒரு தேசியக் கலைஞன். முழுமையான நடிகர். வில்லனாக நடிக்கும்போது பார்ப்பவர்கள் பயப்படுவார்கள், உறுதுணைப் பாத்திரங்களில் அவர் நடிப்பைக் கண்டு கலங்குவார்கள், நகைச்சுவைப் பாத்திரத்தில் கண்டு சிரிப்பார்கள், நாயகனாக நடிக்கும் போது ஆராதிப்பார்கள். ஒரு நடிகராக இத்தனை பரிமாணங்களைக் காட்டுவது மிகக் கடினம். ஒரு நடிகனாக எனக்கு அது தெரியும்.
அவர் நம்மைப் பிரிந்தது பெரிய துக்கமே. ஆனால் அவர் உயிர்வாழ்ந்த இந்த குறைந்த காலத்திலும் சிறந்த படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் அவரது பாத்திரம் அவ்வளவு சிறப்பானது. அதை எப்போதும் நாம் போற்றுவோம். அதுதான் அவரது சிறப்பம்சம்.
மணி, என்னைப் போன்ற பலரை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. அவரது குடும்பம், நண்பர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை இங்கு அழைத்ததற்கு நன்றி.
வீடியோ:
</p>