Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

திரை விமர்சனம்: உடன்பிறப்பே

அப்பாவும் அம்மாவும் இருக்க வேண்டிய இடத்தில் அண்ணன் வைரவனை(சசிகுமார்) வைத்துப் போற்றுகிறார் தங்கை மாதங்கி (ஜோதிகா). தங்கையையே தன் வாரிசாகப் பார்க்கிறார் வைரவன். அதனால், தங்கையை பிரிய மனமின்றி, பள்ளி ஆசிரியர் சற்குணத்தை (சமுத்திரக்கனி) வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிக்கொள்கிறார். பொது விஷயங்கள் மீதான வைரவனின் தார்மீக கோபமும், அதனால் வெளிப்படும் வன்முறையும் குடும்பத்துக்கு சிக்கலை கொண்டுவருகிறது. வைரவனின் முரட்டுத்தனம் உருவாக்கிய தாக்கத்தால் வீட்டில் அசம்பாவிதம் நிகழ, அங்கிருந்து மனைவி, மகளுடன் வெளியேறுகிறார் ஆசிரியர் சற்குணம். காலம் விரைந்தோட, கணவனையும் அண்ணனையும் இணைக்கப் போராடுகிறார் மாதங்கி. பிரிந்த குடும்பம் எப்படி இணைந்தது என்பது கதை.

‘பாசமலர்’, ‘முள்ளும் மலரும்’ ‘கிழக்குச் சீமையிலே’ தொடங்கி நாம் பல படங்களில் பார்த்து, உணர்ந்து, அழுது, மகிழ்ந்த அதே அண்ணன் - தங்கை பாசம்தான் ஒருவரிக் கதை. அதற்குள், இரண்டு அழுத்தமான சம்பவங்களைபுதைத்து, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் இரா.சரவணன். ஆனால், பல காட்சிகள் தேவையற்றும், திணிப்பாகவும் உள்ளன.குறிப்பாக, ஜோதிகா கதாபாத்திரத்தை தூக்கிப்பிடிப்பதற்காக நுழைக்கப்பட்டிருக்கும் தாலியை அடகுவைக்கும் காட்சி,ஹீரோயிசத்தை தோற்கடிக்கும் சினிமாத்தனம். வைக்கோல்போரில் டிராக்டரை ஒளித்து வைத்திருப்பது உட்பட பல காட்சிகளை இப்படி பட்டியலிடலாம்.

கண்முன்னால் நடக்கும் தவறுகளை ‘தட்டி’க் கேட்கும் வேடம் சசிகுமாருக்கு எப்போதும்போல நன்கு பொருந்துகிறது. என்ன அநீதியானாலும், சட்டத்தின் வழிதீர்வுகாண விரும்பும் ஆசிரியர் வேடத்தில்சமுத்திரக்கனியும் கச்சிதம். அண்ணனுக்கும், கணவனுக்கும் இடையில் பாச, பந்தக்கயிற்றில் பிணைந்து, கடந்த காலத்தின்வலியுடன் ஊடாடும் கிராமத்துப் பெண்ணாக ஜோதிகாவின் நடிப்பு உயர்தரம். சசிகுமார் வீட்டில் வளரும் உறவுக்காரப் பணியாளராக, சூரி படும்பாடு படம் முழுவதும் இயல்பான நகைச்சுவையை இறைத்துச் செல்கிறது. கலையரசன், நரேன் ஆகிய துணை கதாபாத்திரங்களுக்கு புதுவிதத்தில் வலுசேர்த்திருந்தால் படம் இன்னும் பலம் பெற்றிருக்கும்.

நாட்டார் தெய்வங்கள், தென்னந்தோப்புகளின் சிலுசிலுப்புக்கு நடுவில் அமைந்திருக்கும் கிராமத்து வீடுகள் எனதஞ்சை மண்ணின் வசந்தகாலப் பசுமையை வெம்மையின்றி தனது ஒளிப்பதிவில் பதிந்து தருகிறார் வேல்ராஜ். சிறந்த எடிட்டராக அறியப்படும் ரூபன், பெரும்பாலான காட்சிகளை வெட்டி சீர்செய்யாமல் அப்படியே ‘டைரக்டர் கட்’ஆக விட்டுவிட்டது பல காட்சிகளை இழுவை ஆக்கியிருக்கிறது. இமானின் இசைப் பங்களிப்பு சிறப்பு.

படத்தொகுப்பில் நம்பிக்கை வைத்து, தேவையற்ற காட்சிகளை நீக்கியும், நீளமான காட்சிகளை குறைத்தும் சீர்செய்திருந்தால், உறவுகளை கொண்டாடும் உண்மையான உணர்ச்சித் தொகுப்பாகியிருக்கும் இந்த ‘உடன்பிறப்பே’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x