

'தர்மதுரை 2' படம் தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'தர்மதுரை'. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர். ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தின் 2-ம் பாகம் தயாராக இருப்பதாக அக்டோபர் 14-ம் தேதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ். இதனை முன்வைத்து மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படம் 'தர்மதுரை 2' எனக் குறிப்பிட்டார்கள்.
தற்போது 'தர்மதுரை 2' வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாகச் செய்திகள் வருகின்றன. வாழ்த்துக்கள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல. ஆகவே அது சம்பந்தமான விஷயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்"
இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.