Published : 01 Jun 2014 09:23 AM
Last Updated : 01 Jun 2014 09:23 AM

திரை விமர்சனம்: பூவரசம் பீப்பீ

வளரிளம் பருவச் சிறுவர்களை வயதுக்கு மீறிய குணங்களைக் கொண்டவர்களாக, பிஞ்சில் பழுத்தவர்களாகச் சித்தரிப்பது அதிகரித்துவருகிறது. க்ரைம் த்ரில்லர் படமான ‘பூவரசம் பீப்பீ’யும் இந்த வகைக்குள் அடங்கும் படம்தான்.

கோவை மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமம். இங்கிருந்து நகரில் சென்று படிக்கும் ஐந்து பேர் கோடை விடுமுறையைக் கொண்டாட்டமாகக் கழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பத்து, பன்னிரெண்டு வயதினர். இவர்களில் முதல் மூன்று சிறுவர்களும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் கொட்டும் மழையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு பாலியல் வன்முறைக் குற்றத்தை நேரடியாகப் பார்க்கிறார்கள். மிருகத்தனமான இந்தச் செயலால் அந்தப் பெண் இறந்துவிடுகிறாள். ஆனால், ஆற்று வெள்ளத்தில் அந்தப் பெண் பலியாகிவிட்டதாக ஊர் நம்புகிறது. ஆனால் அது ஆற்றின் குற்றமல்ல, குற்றத்தை இழைத்தவர்கள் அதே ஊரைச் சேர்ந்த நான்கு பேர் என்பது அவர்களுக்குத் தெரியவருகிறது. சரியான ஆதாரத்துடன் அவர்களை போலீஸில் சிக்க வைக்க இந்தக் குழு என்ன செய்தது என்பதுதான் திரைக்கதை.

குற்றப் பின்னணி கொண்ட கதையைக் குழந்தைகளுடன் இணைத்து அதை த்ரில்லராக திரைக்கதை அமைத்த விதத்தில் இயக்குநர் கவனத்தைக் கவர்கிறார். தங்களிடம் கிடைக்கும் பழைய ராணுவ ரேடியோ ஒன்றை வைத்துக்கொண்டு அவர்கள் இந்தக் குற்றத்தை அம்பலப்படுத்தும் திட்டமும் அதைத் திரையில் காட்டியிருக்கும் விதமும் புதுமை, விறுவிறுப்பு. சிறார்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று சித்தரித்த விதத்தைப் பாராட்டலாம். கூகிள் உட்படப் பல அம்சங்களும் திரைக்கதையில் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

குடிகாரரின் பையன் படும் வேதனையைச் சித்தரித்த விதம் மனதைத் தொடுகிறது. +2 மாணவன் பீர் பாட்டிலை வாங்கி வயிற்றில் மறைத்து எடுத்துவரும்போது, அவன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வயிற்றைக் கிழித்துக்கொள்ள, “நான் செத்தாலும் பரவாயில்லை... பாட்டில் குத்திச்சுன்னு சொல்லிடாதீங்கடா, எங்க அப்பாவுக்கு பெரிய அவமானம்” என்று அவன் கெஞ்சும் காட்சியில் யதார்த்தம் முகத்தில் அறைகிறது. அதேபோல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கவனமாகக் காய் நகர்த்திச் சமூக விரோதிகளை போலீஸில் சிக்க வைப்பதில் படம் சுவையாக நகர்த்தப்படுகிறது.

பதின்பருவத்தின் தொடக்கத்தில் காலடி வைக்கும் சிறார்கள் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்கும் இடையிலான ஊடாட்டத்தில் நிற்பவர்கள். இவர்களைத் திரைப்படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கையாளும்போது ஒரு இயக்குநர் மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும்.

விடலைப் பருவக் குறுகுறுப்பு என்பதைத் தாண்டி, வயது வந்தவர்களுக்கான காதல் உணர்ச்சிகளைக் கொண்டவர்களாகவே இந்தப் படத்தில் சிறுவர்கள் காட்டப்படுகிறார்கள். வயது வந்தவர்கள் காதல் விவகாரங்களில் நடந்துகொள்ளும் விதத்தையே இவர்களும் பின்பற்றுவதாகக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநரான ஹலிதா ஷமீம். இப்படி முழுக்க முழுக்க வயதுக்கு வந்தவர்களின் பார்வையுடன் விடலைச் சிறுவர்களைச் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.

கதையுடன் கொஞ்சமும் தொடர்பற்ற இந்து - இஸ்லாமியக் கலவரம் ஒன்றை அனிமேஷன் குறும்படம்போல சித்தரித்திருப்பதும் தேவையற்ற திணிப்பு. அனாவசியமான பல காட்சிகளால் படம் தொய்வடைவதைத் தவிர்த்திருக்கலாம்.

விறுவிறுப்பான திரைக்கதை, மனோஜ் பரமஹம்சாவின் தரமான ஒளிப்பதிவு, சிறுவர்களின் முதிர்ச்சியான நடிப்பு, புத்துணர்ச்சியுடன் ஒலிக்கும் அருள்தேவின் இசை, பின்னணி இசை ஆகியவற்றைப் பாராட்டத் தக்க அம்சங்களாகக் குறிப்பிடலாம். திரைக்கதையைக் கையாண்ட விதமும் நன்று. ஆனால், பெண் இயக்குநருக்கான தனி அடையாளம் எதையும் பார்க்க முடியவில்லை.

திரைக்கதை உள்ளிட்ட பல அம்சங்கள் கவர்ந்தாலும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளில் சிறுவர்களைப் பொருத்தியிருப்பதால் பூவரசம் பீப்பீயின் ஒலியை ரசிக்க முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x