திரை விமர்சனம்: டாக்டர்

திரை விமர்சனம்: டாக்டர்
Updated on
2 min read

ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றும் வருணுக்கும் (சிவகார்த்திகேயன்), பத்மினிக்கும் (ப்ரியங்கா அருள் மோகன்) நிச்சயமாகியிருந்த திருமணம் நின்றுபோகிறது. தனக்கும் வருணுக்கும் ஏன் சரிவராது என்பதை நேருக்கு நேராகக் கூறி நிராகரிக்கிறார் பத்மினி. அதே நாளில் பத்மினியின் அண்ணன் மகள் கடத்தப்படுகிறார். சிறுமியை மீட்க களமிறங்குகிறார் வருண். மீட்டாரா என்பது மீதிக் கதை.

பெண்கள், குழந்தைகள் கடத்தல் எனும் சீரியஸான பிரச்சினையை கையில் எடுத்துள்ளார் இயக்குநர். அதை சொல்வதற்காக அவல நகைச்சுவை, சென்டிமென்ட் கலவையில் உருவான காட்சிகளை திரைக்கதை நெடுகிலும் அடுக்கியுள்ளார். நாயகனுக்கான சவால் கண்முன்னால் பளிச்சிடுகிறது. ஆனால், அதற்காக அவர் கட்டமைக்கும் அணியில், குழந்தைகடத்தலால் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ‘காமெடி பீஸ்’களாக மாறியிருப்பது நெருடல்.

லாஜிக் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், கதாபாத்திரங்களை நகைச்சுவையில் தோய்த்து உலவவிடுவதில் கவனம் குவித்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலிப் குமார்.

பத்மினி வீட்டின் பணிப்பெண்ணாக வரும் தீபா அக்கா, காவல் துறையின் நண்பனாக வரும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோருடன் யோகிபாபுவும் இணைந்ததும் பெரும் நகைச்சுவை சூறாவளி வீசத் தொடங்கிவிடுகிறது. இந்தஅணியில், உள்ளூர் தாதா மகாலியாக வரும் சுனில் ரெட்டி, அவரது உதவியாளர் கிளியாக வரும் சிவாவும் சேர்ந்துகொள்ளும்போது யானை புகுந்த வெண்கலக் கடையாகிவிடுகிறது திரையரங்கு.

நாயகனாக வலம் வந்த வினய், இதில் ‘ஒயிட் காலர்’ வில்லனாக அசரடிக்கிறார். வில்லனாக மிரட்டிய மிலிந்த் சோமன் சில காட்சிகளே வந்தாலும் டெம்பிளேட் கேரக்டரில் வந்து நாயகனுக்கு கைகொடுக்கிறார். அர்ச்சனா, இளவரசு, அருண் அலெக்ஸாண்டர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்கிறார்கள்.

துணை கதாபாத்திரங்களுக்கு வழிவிட்டு, தனது அமைதியான நடிப்பு மூலம், தன்னையும் ஒருகதாபாத்திரமாக உணர வைக்கிறார் சிவகார்த்திகேயன். அன்பறிவ் வடிவமைத்த மெட்ரோ ரயில் சண்டைக் காட்சியில் அவர் காட்டும்வேகமும், அனிருத் இசையில் உருவான ‘செல்லம்மா’ பாடலில் நடனத்தில் காட்டும் நளினமும் வெகு சிறப்பு.

ப்ரியங்கா அருள் மோகன் தனக்கு அமைந்த களத்தில் கலகலப்பும், காதலுமாக கவர்ந்துவிடுகிறார். படம் முழுவதும் இழையோடும் நகைச்சுவை உணர்ச்சிக்கு முட்டுக்கொடுக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்.

எத்தனை சீரியஸான கதையையும் அவல நகைச்சுவை எனும்டெம்ப்ளேட்டுக்குள் பொருத்தினால், அதில் செய்தியும் சொல்லமுடியும் என முயற்சித்துள்ளார் இயக்குநர்.

லாஜிக் பற்றிய அக்கறையுடன் திரைக்கதையின் ட்ரீட்மென்ட்டை மாற்றியிருந்தால் இன்னும் ரசனைக்குரியவராக மாறியிருப்பார் இந்த ‘டாக்டர்’.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in